Published : 28 Dec 2023 06:49 PM
Last Updated : 28 Dec 2023 06:49 PM
சென்னை: “உடல் நலம் சீராக இருந்திருந்தால் விஜயகாந்த் தமிழகத்தில் வலுவான அரசியல் சக்தியாக நீடித்திருப்பார்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள புகழஞ்சலிக் குறிப்பில், ''தேமுதிக நிறுவனரும் தலைவருமான திரைநாயகர் #கேப்டன்_விஜயகாந்த் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. அவரது மறைவு தேமுதிகவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். தனிப்பட்ட முறையில் என் மீதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் தனது நல்லன்பைச் செலுத்தியவர். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்தவர் விஜயகாந்த். கட்சித் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக வளர்ச்சியடைந்தார். உடல் நலம் சீராக இருந்திருந்தால் தமிழகத்தில் வலுவான அரசியல் சக்தியாக நீடித்திருப்பார். அவர் ஏழை, எளிய மக்கள் மீது என்றும் மாறாத பற்று கொண்டவர். தமிழ்த் தேசிய உணர்வாளர். ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டங்களுக்குத் துணிச்சலாக தனது நல்லாதரவை எப்போதும் நல்கியவர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது கொண்டிருந்த தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் தன்னுடைய அன்பு மகனுக்குப் பிரபாகரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர்.
கள்ளங்கபடம் இல்லாமல், ஒளிவு மறைவு இல்லாமல் அரசியல் செய்தவர். தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் துணிச்சலோடு வெளிப்படுத்தியவர். 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் "மக்கள் நலக் கூட்டணியின்" முதலமைச்சர் வேட்பாளராக அவரை முன்னிறுத்திப் பணியாற்றிய காலத்தில் அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றேன். அந்த காலங்களில் அவர் எம்மீது வெளிப்படுத்திய அன்பு என்றென்றும் மறக்க முடியாததாகும்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். உடல் நலம் தேறி மீண்டு வருவார் என்கிற நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், சிகிச்சை பலனளிக்கவில்லை என்பது ஏமாற்றமே ஆகும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தேமுதிக தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment