Last Updated : 28 Dec, 2023 06:39 PM

 

Published : 28 Dec 2023 06:39 PM
Last Updated : 28 Dec 2023 06:39 PM

“விஜயகாந்த் இன்னும் பல உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவர்” - தமிழிசை புகழஞ்சலி

புதுச்சேரி: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, அம்மாநில முதல்வர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். ''தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவரும், தேமுதிக கட்சி தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஒரு அரசியல் தலைவராக தனது ஆளுமையாலும், மனிதாபிமானம் மிக்க பண்புகளாலும் பலரது இதயங்களுக்கு நெருக்கமான ஒரு நல்ல மனிதர்.

வாழ்நாளில் இன்னும் பல உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவர். அவரது இழப்பு அரசியல் களத்திற்கும், திரையுலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கட்சித் தொண்டர்கள், திரை உலக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

முதல்வர் ரங்கசாமி: ''திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது. தனது திரைப்படங்கள் மூலம், புரட்சிகரமான கருத்துகளையும் நாட்டுப் பற்றையும் மக்களிடையே கொண்டு சேர்த்தவர் விஜயகாந்த். இதற்காக இந்திய அரசின் சிறந்த குடிமகனுக்கான விருதையும் பெற்றவர். தனது நடிப்பிற்காக கலைமாமணி விருது. எம்.ஜி.ஆர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், தனது ரசிகர்களால் கேப்டன் என்று பெருமையோடு அழைக்கப்படுவதையே பெரும் விருதாகக் கருதினார்.

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் விளங்கிய அவர், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் வெற்றிகரமான தலைவராக முத்திரை பதித்தவர். தனக்கு சரியென்று பட்டதை தைரியமாக, வெளிப்படையாகச் சொல்லும் போக்கு எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் மனிதராகவே அவரை உலகிற்கு அடையாளப் படுத்தியுள்ளது.

சினிமா, அரசியல் என ஒரு தனி மனிதராக அவர் சாதித்தவை உழைப்பை ஊன்றுகோலாகக் கொண்டவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரது இழப்பு திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும். ரசிகர்களுக்கும் அவரது கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுவை திரையரங்குகளில் காலைக் காட்சி ரத்து: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து புதுவையிலும் அனைத்து திரையரங்குகளிலும் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x