Published : 28 Dec 2023 07:07 PM
Last Updated : 28 Dec 2023 07:07 PM
மதுரை: “விஜய்காந்த் இழப்பு என்பது எங்களது குடும்பத்துக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பு” என அவரின் சகோதரர் செல்வராஜ் கூறினார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகில் ராமானுஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி - ஆண்டாள் தம்பதி. அழகர்சாமி மதுரைக்கு வந்து கீரைத்துறை பகுதியில் ரைஸ் மில் தொழில் ஆரம்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மதுரை மேலமாசி வீதியிலுள்ள சவுராஷ்டிரா சந்து பகுதியில் குடியேறியுள்ளார். அழகர்சாமி - ஆண்டாள் தம்பதிக்கு விஜயலட்சுமி, நாகராஜ் (இறந்துவிட்டார்) விஜயராஜ் (எ) கேப்டன் விஜய்காந்த், திருமலா தேவி ஆகியோரும், ஆண்டாள் இறந்த பிறகு அழகர்சாமி அவரது அக்காள் மகளான ருக்மணியை 2வது திருமணம் செய்துள்ளார். இவருக்கு செல்வராஜ், பால்ராஜ், சித்ராதேவி, ராமராஜ் (இறந்துவிட்டார்) மீனாகுமாரி, சாந்தி, பிருதிவிராஜ் ஆகியோரும் உள்ளனர்.
விஜய்காந்த் உள்ளிட்ட அனைவரும் பெரும்பாலும் மதுரையில் பிறந்து வளர்ந்துள்ளனர். அழகர்சாமி தனது பிள்ளைகள் எப்போதும் 'ராஜா'வாகவே இருக்க வேண்டும் என, கருதி எல்லா குழந்தைகளின் பெயருக்கு பின்னால் 'ராஜ்' என்றும் பெண் குழந்தைகளுக்கு பெரும்பாலும் 'தேவி' என, முடியும் வகையிலும் பெயர் வைத்துள்ளார். அழகர்சாமி மதுரை கீறைத்துறையில் தொடங்கிய ரைமில் தொழில் இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
தற்போது, ஆண்டாள், ருக்மணி என்ற பெயரில் இரு ரைஸ்மில் செயல்படுகிறது. இவற்றை குடும்பத்தினர் கவனிக்கின்றனர். மேலமாசி வீதியிலுள்ள பூர்வீக வீட்டில் விஜயகாந்த் தம்பி செல்வராஜ் மற்றும் அவரது கும்பத்தினர் வசிக்கிறார். விஜய்காந்துடன் பிறந்த சகோதரர்கள் மதுரை, சென்னை, தேனி போன்ற ஊர்களில் வசிக்கின்றனர். இவரது உடன் பிறந்த அக்கா கணவர் பிரபல மருத்துவர் துரைராஜ். மதுரையில் டிஎம் கோர்ட் அருகில் கிளினீக் நடத்தினார். தற்போது சென்னையில் வசிக்கிறார். செல்வராஜ் மற்றும் அவரது சகோதரர், சகோதரரிகளின் குடும்பத்தினர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
விஜயகாந்த் சகோதரர் செல்வராஜ் பேட்டி: விஜய்காந்த் இறப்பு குறித்து அவரது தம்பி செல்வராஜ் கூறியது: ''சென்னைக்கு சென்று, சிரமப்பட்டு சினிமா துறைக்கு சென்று, முன்னேறினார். எங்களை நன்றாக கவனித்தார். அரசியல் கட்சி தொடங்கியது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி, பெருமையாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் எங்களது அப்பா இறந்த தினத்திற்கு மதுரை பூர்விக வீ்ட்டுக்கு வருவார். அப்பா, அம்மா படத்துக்கு மாலை போட்டு வணங்கிவிட்டுச் செல்வார்.
ஓரிரு ஆண்டாகவே வரவில்லை. தேர்தல் போட்டியிடும்போது, முதலில் இங்கு வந்து எங்களது பெற்றோரை வணங்கிவிட்டுச் சென்றார். அதுபோன்று திருமங்கலம் அருகில் காங்கேயம் நத்தம் கிராமத்திலுள்ள குலதெய்வதற்கு ஆண்டுதோறும் செல்வார். 4 மாதத்திற்கு முன்பு எனது மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்னைக்கு சென்றபோது, நேரில் பார்த்தேன். உடல் நிலை கருத்தில் கொண்டு முடிந்தால் வருகிறேன் என கூறினார். அவரால் வர முடியாததால் அண்ணியார் வந்தார்.
எனது மகள், மருமகன் அவரை பார்க்கச் சென்னைக்கு சென்றனர். மாப்பிள்ளை பார்த்து அழகாக இருக்கிறார் என கூறியிருக்கிறார். உறவினர் தவிர, யார் உதவி கேட்டாலும், ஓடிப் போய் செய்வார். நாடார் வித்யாலயா, இசிசி பள்ளியில் படித்தார். அவர் சுமார் 30 வயது வரையிலும் மதுரையில் இருந்தார். தினமும் 'புல்லட்' ஒன்றில் கீரைத்துறைக்குச் சென்று ரைஸ் மில் பணியை கவனிப்பார். பிறகு திரைப்பட ஆசையில் சென்னைக்கு கடுமையாக உழைத்து முன்னேறினார்.
எங்களது சகோதர, சகோதரிகளின் குடும்பத்தினரை எப்போதும் அரவணைத்துச் செல்வார். இனிமேல் என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியவில்லை. அண்ணியார், அவரது மகன்கள் சொல்வதை கேட்போம். அவரது இழப்பு எங்களது குடும்பத்தினரை மட்டுமின்றி அவரது கட்சியினர், ரசிகர்களுக்கும் பேரிழப்பு'' என கண்ணீருடன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT