Published : 28 Dec 2023 05:07 AM
Last Updated : 28 Dec 2023 05:07 AM

சென்னை எண்ணூரில் தனியார் உர தொழிற்சாலையில் வாயு கசிவு - நடந்தது என்ன?

சென்னை எண்ணூர் தனியார் உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சென்னை: சென்னை எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால், நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சு திணறல், தொண்டை எரிச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலையை மூடுமாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், உற்பத்தியை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலைக்கு அமோனியா வாயுதான் முக்கிய மூலப்பொருள் ஆகும். சரக்கு கப்பல்களில் திரவ வடிவில் கொண்டு வரப்படும் அமோனியா வாயு, எண்ணூர் பகுதியில் கடலில் பதிக்கப்பட்டுள்ள குழாய் வழியாக ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 26-ம் தேதி (நேற்று முன்தினம்) நள்ளிரவு 11.45 மணிஅளவில் அந்த குழாயில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், பெரியகுப்பம், சின்னகுப்பம், தாழங்குப்பம், எண்ணூர், எண்ணூர் குப்பம் என சுற்றியுள்ள மீனவ பகுதிகள் முழுவதும் அமோனியா வாயு பரவியது. அப்போது, தூக்கத்தில் இருந்த மக்களுக்கு இருமல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத் திணறலும் இருந்ததால், மக்கள் பதறியபடி எழுந்தனர்.

அப்பகுதியில் ஏற்கெனவே ஒரு முறை அமோனியா வாயு கசிவு ஏற்பட்டபோது, இதேபோன்ற அறிகுறிகள்தான் ஏற்பட்டுள்ளன. அதனால், தற்போதும் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதை உணர்ந்த மக்கள், உடனடியாக வீடுகளை விட்டுவெளியேறி, வேறு பகுதிகளை நோக்கிசெல்லத் தொடங்கினர். சுற்றுவட்டாரம் முழுவதும் இதுபோல மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர்.

அதில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. சிலருக்கு கடும் மூச்சு திணறல், தொண்டை வலி, தோல் எரிச்சல், கண்எரிச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர். சிலர் நள்ளிரவு என்றும் பாராமல், குடும்பம் குடும்பமாக படகுகளில் ஏறி பழவேற்காட்டுக்கு சென்றனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 36 பேரும், ஸ்டான்லிமருத்துவமனையில் 6 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் உள்ளிட்டோர் அவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

சிகிச்சை தேவைப்படாதவர்கள், பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது:

நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருந்தபோது, திடீரென இருமல் ஏற்பட்டு, தொண்டை அடைப்பதுபோல இருந்ததால், தூக்கத்தில் இருந்து எழுந்தோம். மூச்சு விட சிரமமாக இருந்தது. சுவாசிக்கும் காற்று ஒருவித நெடியுடன் இருந்தது. வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தால், தெருக்களில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பலரும் தங்கள் வாகனங்களில் குடும்பத்துடன் பாதுகாப்பான பகுதியை நோக்கி அவசர அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருந்தனர். நெடிஅதிகரித்ததால், கைக்குழந்தைகளின் ஆடைகளைக்கூட எடுக்காமல், தூக்கத்திலேயே அவர்களை தூக்கிக்கொண்டுவெளியேறினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்கள் போராட்டம்: வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பெரியகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தடுக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். ஒரு கி.மீ. தூரத்துக்கு முன்பாகவே சாலையில் தடுப்புகளை அமைத்த போலீஸார், தீவிர சோதனைக்கு பிறகு, அத்தியாவசிய சேவைகளுக்காக செல்வோரை மட்டுமே அனுமதிக்கின்றனர்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாதவரம் தொகுதி எம்எல்ஏ சுதர்சனம் சந்தித்து, ‘‘வாயு கசிவை தடுக்கவும், தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதால், போராட்டத்தை கைவிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க மறுத்து அவரை முற்றுகையிட்ட மக்கள், ‘‘தொழிற்சாலையை மூடுவோம் என எழுதி கொடுத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம்’’ என்றனர்.

வாயு கசிவு ஏற்பட்ட பகுதியிலும், தொழிற்சாலையிலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர். ‘‘தொழிற்சாலையை ஆய்வு செய்ய வாரியம்சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் அங்கு ஆய்வு செய்துவருகின்றனர். தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

தென்னிந்திய மீனவர் நலச் சங்க தலைவர் கு.பாரதி கூறும்போது, ‘‘எண்ணூர், மணலி, திருவொற்றியூர் போன்ற மீனவ பகுதிகள் புயல், மழை போன்ற பேரிடர்கள் மட்டுமன்றி, தொழில்நிறுவனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகின்றன. இப்பகுதியை பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மண்டலமாக அறிவித்து, மக்களை அரசு பாதுகாக்க வேண்டும். அனைவருக்கும் பிரத்யேக முகக் கவசம் வழங்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x