Last Updated : 28 Dec, 2023 05:56 AM

 

Published : 28 Dec 2023 05:56 AM
Last Updated : 28 Dec 2023 05:56 AM

சென்னை உட்பட 6 ரயில்வே கோட்டங்களில் ரயில் நிலைய ஆலோசனை குழு அமைகிறது: தீவிர முயற்சியில் தெற்கு ரயில்வே

சென்னை: ரயில் பயணிகளுக்கு வழங்கும் அடிப்படை வசதிகள், சேவைகளை மேம்படுத்தும் வகையில், ரயில் நிலைய ஆலோசனைக் குழுவை சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் அமைக்கும் முயற்சியை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது.

தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உட்பட 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இந்த ரயில்வே கோட்டங்களில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும், ரயில் சேவைகள், பயணிகளின் தேவைகள் தொடர்பாக ஒவ்வொரு கோட்டங்களிலும் உள்ள ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதன்பேரில், ரயில்வேயில் பயணிகளின் வசதிகள், ரயில்களின் சேவைகள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த ஆலோசனைக் குழு ரயில்வே கோட்ட அளவிலும், மண்டல அளவிலும் செயல்படுகிறது. 2 ஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர் குழு மாற்றம் செய்யப்படுகிறது.

இதற்கிடையே, ரயில்வேயில் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் விதமாக, ஆலோசனைக் குழுவை ரயில் நிலைய அளவில் விரிவுபடுத்த ரயில்வே வாரியம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. அனைத்து மக்களின் கருத்துகளை அறிந்து, ரயில்வேயில் வசதிகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்றும், இதை விரைவாக அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து, ரயில் நிலைய அளவில் ஆலோசனைக் குழுவை அமைக்க சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 ரயில்வே கோட்டங்களுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியது. தற்போது, இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

ரயில்வே உபயோகிப்பாளர்களின் சிறந்த பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்கும், சேவை தொடர்பான விஷயங்களில் ரயில்வே நிர்வாகத்துடன் அடிக்கடி ஆலோசனை நடத்துவதற்கும் ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு மண்டல, கோட்ட அளவில் செயல்படுகிறது. இதை விரிவுபடுத்தும் வகையில், ரயில் நிலைய ஆலோசனைக் குழு அமைக்கப்பட உள்ளது.

பயணிகளின் சேவையின் செயல்திறனை மேம்படுத்தும் விதமாக, ரயில் நிலைய உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு அமைக்கப்பட உள்ளது. ரயில் நிலையத்தின் பயணிகள் வருகை, வருவாய் அடிப்படையில் ரயில் நிலையங்களை தரம் பிரித்து, அதன் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இதில் வர்த்தக சபை உறுப்பினர், தொழிலதிபர்கள், கல்லூரியைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பல்வேறு பிரிவுகளில் இருந்து மொத்தம் 7 முதல் 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து குழு அமைக்கப்படும். இந்த உறுப்பினர்கள் 2 ஆண்டு வரை பொறுப்பில் இருப்பார்கள்.

தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நிலைய ஆலோசனைக் குழு அமைக்க தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி மனோகரன் கூறியதாவது:

நிலைய அளவில் ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோசனை குழு அமைப்பது வரவேற்கக் கூடியது. இதன்மூலம், பயணிகளின் அடிப்படை வசதி, சேவை மேம்படும். ரயில் நிலையங்களுக்கு நாள்தோறும் வந்து செல்லும் பயணிகளின் தேவை என்ன என அறிந்து, அவற்றை செயல்படுத்த முடியும். இதற்கு இந்த ஆலோசனை குழு உறுப்பினர்கள் பாலமாக இருப்பார்கள். இவ்வாறு கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x