Published : 28 Dec 2023 05:32 AM
Last Updated : 28 Dec 2023 05:32 AM

மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூரில் தலா ஒருவருக்கு புதிய வகை கரோனா உறுதி: தமிழகத்தில் பரிசோதனை அதிகரிப்பு

கோப்புப் படம்

சென்னை: மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் மாவட்டத்தில் தலா ஒருவருக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மூன்று அலைகளாக பரவி பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கரோனா தொற்று, கடந்த ஓராண்டாக கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில், கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசியாவைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் உருமாற்றம் அடைந்த ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. தமிழகத்திலும் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், புதிய வகை கரோனா தொற்றாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 4 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை மறுத்த தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், பரிசோதனைகள் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றனர்.

இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கரோனா பெருந்தொற்று உருமாற்றமடைந்து கொண்டே இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாகப் பணிபுரிந்த மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் கூறியிருந்தார். அதனை உறுதிபடுத்தும் வகையில் ஜேஎன்1 வகை தொற்று தற்போது இந்தியாவில் பரவி வருகிறது.

கேரளாவில் 100-க்கும் மேற்பட்டோருக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் இறுதியில் எடுக்கப்பட்ட 56 மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

அதில் 30 மாதிரிகளின் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. ஏற்கெனவே சமூகத்தில் பரவியிருக்கும் எக்ஸ்பிபி வகை கரோனா 24 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இருவருக்கு பிஏ.1 வகை பாதிப்பு இருந்தது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், திருச்சி, மதுரை, கோவை, திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்த 4 பேருக்கு ஜேஎன்1 வகை கரோனா இருந்தது தெரியவந்தது. அவர்கள் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை. கர்ப்பிணிகள், முதியோர், இணை நோயாளிகள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

மரபணு பகுப்பாய்வுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட மேலும் 96 மாதிரிகளின் முடிவுகள் அடுத்த சில நாட்களில் வெளியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் 26 மாதிரிகளின் முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை. அதேபோல், மாநில பொது சுகாதாரத் துறையின் ஆய்வகத்தில் 70 மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் முடிவுகள் சில நாட்களில் கிடைக்கும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேநேரம், வழக்கமான கரோனா பரிசோதனைகள் தமிழகம் முழுவதும் அதிகரிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x