Published : 28 Dec 2023 08:00 AM
Last Updated : 28 Dec 2023 08:00 AM
மதுரை: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டு களில் 23 ஜல்லிக்கட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதால் அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதோடு, வீரர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழப்பைத் தடுக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுடன் தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பார்வையாளர்கள், வீரர்கள், காளை உரிமையாளர்கள் உயிரிழப்பை முற்றிலும் தடுக்க முடியவில்லை.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 23 வீரர்கள் உயிரிழந்துள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா ரூ.10 லட்சத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், தற்போது வரை அறிவிக்கப்படவில்லை என ஜல்லிக்கட்டு வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில், மதுரை ஜல்லிக்கட்டுப் பயிற்சி மைய நிர்வாகி முடக்கத்தான் மணி தலைமையில் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று போராட்டம் நடைபெற்றது.
அப்போது முடக்கத்தான் மணி கூறியதாவது: தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் உயிரிழந்தால் தமிழக அரசு நிவாரணம் வழங்குவதில்லை. உயிரிழக்கும் வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான ஈடுபாட்டாலே காளைகளை, அதன் உரிமையாளர்கள் அன்றாட வருவாயில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி பராமரிக் கின்றனர். திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு காளைகளைப் பராமரிக்கும் உரிமையாளர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போது வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் வழங்க வேண்டும். போட்டிகளில் காயமடைவோர் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால், சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளை மட்டும் நம்பியிருக்காமல் தனியார் மருத்துவமனை களிலும் சிகிச்சைபெற ஜல்லிக்கட்டு வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததால், காளைகளுடன் சிறுவர்களை அழைத்து வருவதற்குத் தடை விதிக்க வேண்டும். போராடிப் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி உரிமையை தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமென்றால் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களை தமிழக அரசு பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT