Published : 27 Dec 2023 06:41 PM
Last Updated : 27 Dec 2023 06:41 PM
சென்னை: “சென்னை - எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட 36 பேர் ஆகாஷ் மருத்துவமனையிலும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேர், என மொத்தம் 42 பேருமே நலமுடன் இருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் வீடுகளுக்கு திரும்புவார்கள். இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உடனடியாக தமிழக முதல்வர் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் இல்லை, தீவிர பாதிப்புகள் எதுவும் இல்லை” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எண்ணுரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிச.27) நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: "செவ்வாய்க்கிழமை இரவு தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு அக்கம் பக்கத்தில் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது.
உடனடியாக பொது மக்கள் சுகாதாரத் துறையை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் 16 ஆம்புலன்ஸ்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களை நேரடியாக சந்தித்து சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன்.எல்லோரும் நலமுடன் இருக்கிறார்கள்.
அதேபோல் ஆகாஷ் மருத்துவமனையில் நேற்று இரவு முதல் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை பற்றி கேட்டு அறிந்தேன். மேலும் நானும், எம்எல்ஏக்கள் சுதர்சனம், சங்கர், மற்றும் மண்டல குழு தலைவர் தனியரசு ஆகியோர் நேரடியாக சென்று சந்தித்து நலம் விசாரித்தோம். கண் எரிச்சல்களுக்கு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தேன்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஒருங்கிணைந்து மருத்துவ முகாமினை பெரிய குப்பம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முகாமினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 36 பேர் ஆகாஷ் மருத்துவமனையிலும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேர் என மொத்தம் 42 பேருமே நலமுடன் இருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் வீடுகளுக்கு திரும்புவார்கள். இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உடனடியாக தமிழக முதல்வர் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
காவல் துறையினர் இரவு நேரத்தில் மீட்பு பணி நடவடிக்கைகளை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். யாருக்கும் எந்த வித பெரிய பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்து இருக்கிறார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் இல்லை, தீவிர பாதிப்புகள் எதுவும் இல்லை.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள 3 குழந்தைகள் காலையில் காலை உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். எல்லோரும் நலமுடன் இருக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களின் மருத்துவ செலவு முழுவதும் அரசே ஏற்றுக் கொள்ளும். ஒரு ரூபாய் கூட பொதுமக்களிடமிருந்து வாங்க கூடாது என்று மருத்துவ நிர்வாகத்திடம் கூறியுள்ளோம். தொழிற்சாலை தொடர்பாக அந்த துறை அமைச்சர் பேசி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT