Published : 27 Dec 2023 04:21 PM
Last Updated : 27 Dec 2023 04:21 PM
சென்னை: ‘பேரிடர் நிவாரண நிதி வழங்காத மத்திய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்க வலியுறுத்தியும் வரும் ஜன.8-ம் தேதி, தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த பெருமழையால் தலைநகர் சென்னையும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போனது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவித்த மக்களை பாதுகாக்கவும், மீட்டு மறுவாழ்வு தொடங்கவும் தமிழக அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட்டது. பேரிடர் நிவாரண உதவிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டிய மத்திய அரசு மாற்றாந்தாய் போக்கில் அலட்சியம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் டிசம்பர் 18-ம் தேதி தென் தமிழகத்தில் பெய்த பெருமழையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாநகர தெருக்களிலும், வீடுகளிலும் வெள்ளம் புகுந்து தேங்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 2 கோடி மக்கள் வாழும் பகுதி பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து, தமிழக முதல்வர் கோரியுள்ள ரூபாய் 21 ஆயிரத்து 692 கோடியை முழுமையாக உடனடியாக வழங்க வேண்டும். ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் அவதூறு பேசி, தமிழக மக்களை அவமதிக்கும் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருவதை வெந்த புண்ணில் வேல் கொண்டு தாக்குவதாக அமைந்துள்ளது.
மத்தியக் குழு விரிவாக பயணம் செய்து, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளது. மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பார்வையிட்டு சென்றுள்ளார். தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி, முதல்வரிடம் உறுதியளித்துள்ளார்.
இவ்வளவுக்கும் பிறகு இதுவரை தமிழகம் சந்தித்த இயற்கை சீற்றப் பேரழிவை எதிர்கொள்ள பேரிடர் நிவாரண நிதி வழங்காத மத்திய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்கவும் வலியுறுத்தி ஜன.8, 2024 திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT