Last Updated : 27 Dec, 2023 03:07 PM

4  

Published : 27 Dec 2023 03:07 PM
Last Updated : 27 Dec 2023 03:07 PM

“தமிழிசை - ரங்கசாமி இடையில் நடப்பது குடும்பச் சண்டை” - புதுச்சேரி காங்கிரஸ் விமர்சனம்

எம்.பி வைத்திலிங்கம் | கோப்புப் படம்

புதுச்சேரி: “ப்ரீபெய்டு மீட்டர் பொருத்த யார் வந்தாலும் மறுப்பு தெரிவித்து அனுமதிக்காதீர்கள்” என்று புதுச்சேரி மக்களுக்கு அம்மாநில காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம்.பி வைத்திலிங்கம் அறிவுறுத்தியுள்ளார். மேலும், “துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் இடையில் நடப்பது குடும்பச் சண்டை. சீர்வரிசை செய்யாததே காரணம்” என்றும் சாடினார்.

புதுச்சேரியில் ப்ரிபெய்டு மின் மீட்டர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காமராஜர் நகர் தொகுதியில் கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி பேசியது: "பாஜக தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் உள்ளன. ஆனால், புதுவையில் ரேஷன் கடைகள் கிடையாது. அதற்கு பதிலாக மக்களுக்கு தீமை விளைவிக்க தெருவுக்கு தெரு மது பார்கள் உள்ளன. மது பார் அமைக்க இடம் கிடைத்தால் இன்னும் பல திறக்கப்படும். ஆயிரம் மது கடைகளை திறக்க முடிவோடு அரசு இருக்கிறது.

மக்கள் வரிப் பணத்தில் மதுபான கடையை திறக்கும் அரசு பக்கத்தில் ஒரு ரேஷன் கடையை திறக்க மறுக்கிறது. மக்களை வஞ்சிக்கும் வகையில் மக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றுகிறார்கள். கடந்த என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தார்கள். அது யார் வீட்டிலும் இல்லை. சண்டே மார்க்கெட்டில் கூட இதை வாங்க ஆள் இல்லை. அது ஓடாது என்பதால் பழைய இரும்பு கடையில் கூட வாங்க மறுக்கிறார்கள். குடும்பத் தலைவிக்கு ரூ.1000 என்ற திட்டம் இன்னும் பலருக்கும் கூட கிடைக்கவில்லை. ரூ1000 போடுவதாக கூறி முதல்வர் ரங்கசாமி மக்களை ஏமாற்றி வருகிறார்.

இதுதான் ரங்கசாமியின் வித்தை. அவரிடம் இது தொடர்பாக கேள்வி கேட்டால் நம் முன்பே அவர் அழுவார். நான் சொல்வதை யாரும் கேட்கவில்லை என ரங்கசாமி கூறுகிறார். பேச்சை கேட்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறாமல் இருப்பது ஏன்? ப்ரீபெய்டு மீட்டர் பொறுத்த யார் வந்தாலும் மறுப்பு தெரிவித்து வீட்டுக்குள் அனுமதிக்காமல் துரத்தி அனுப்புங்கள்.

துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் நடப்பது குடும்பச் சண்டை. அண்ணன் - தங்கைக்குள் எதற்காக சண்டை வருகிறது? பொங்கல் சீர்வரிசை வரவில்லை, தீபாவளி சீர்வரிசை வரவில்லை, ஆடி வரிசை வரவில்லை என்று தங்கை சண்டை போடும். இவர் போய் சீர் வரிசை வைத்தவுடன் சண்டை தீர்ந்து விடும். சீர் செய்யவில்லை என்றால் தங்கை எதிர்க்கிறது. இதுதான் புதுவை அரசாங்கத்தில் நடக்கிறது.

மதுபானம் மூலம் முதல்வருக்கு வருமானம் வந்தால் அதிகாரிகள் நல்லவர்கள். தடுத்தால் அவர்கள் எதிரிகளாகி விடுகிறார்கள்” என்று குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், அங்கு இருந்த மின்சார டிரான்ஸ்பார்மருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல காங்கிரஸ் உப்பளம் வட்டாரம் கிழக்கு மற்றும் மேற்கு சார்பாக மின் துறை தலைமை அலுவலகம் முன்பும், நெல்லித்தோப்பு வட்டாரம் சார்பில் அண்ணா நகர் மேற்கு மின்துறை அலுவலகம் எதிரிலும், தட்டாஞ்சாவடி வட்டாரம் சார்பில் தாகூர் நகர் பாக்கு முடையான் பட்டிலும், முதலியார்பேட்டை வட்டாரம் சார்பில், முதலியார் பேட்டை தபால் நிலையம் அருகிலும் பிரிபெய்டு மின் மீட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x