Published : 27 Dec 2023 01:12 PM
Last Updated : 27 Dec 2023 01:12 PM

எண்ணூர் அமோனியா வாயு கசிவு விவகாரம்: ஜன.2-ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை

சென்னை: எண்ணூர் அமோனியா வாயு கசிவு விவகாரத்தை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்கவுள்ளது. ஜன.2-ல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அமோனியா வாயு கசிவு தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்கவுள்ளதாகவும், புது வருட விடுமுறை முடிந்து, ஜனவரி 2-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எண்ணூர் எண்ணெய் கழிவு தொடர்பான வழக்கையும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், தற்போது வாயு கசிவு வழக்கையும் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

எண்ணூர் வாயு கசிவு: எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உள்ளூர் மக்களே சக மக்களுக்கு தகவல் தெரிவித்து கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதையடுத்து, தொழிற்சாலை மற்றும் காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாயுக் கசிவு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்ததாக காவல் துறை தகவல் அளித்தது. இருப்பினும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிலர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், அந்தப் பகுதி மக்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், எண்ணூரில் உள்ள உர ஆலை செயல்பாடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மேலும், ஆலையை ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குழு அமைத்துள்ளதாகவும், அந்தக் குழு ஆய்வறிக்கை அளிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x