Published : 27 Dec 2023 12:52 PM
Last Updated : 27 Dec 2023 12:52 PM

“கோரமண்டல் ஆலை செயல்பாடு தற்காலிக நிறுத்தம்; அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய குழு” - அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் பெய்யநாதன்

சென்னை: அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். எதிர்காலத்தில் அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டி ஒன்றில் அவர், “எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆலையில் நேற்றிரவு கப்பலில் இருந்து அமோனியா நிரப்பும்போது (ஆஃப்லோட்) செய்யும்போது வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அதாவது 15 நிமிடங்களில் அந்த நிலைமையை ஆலை நிர்வாகம் சீர் செய்துள்ளது. இருப்பினும், வாயுக்கசிவால் 18 பேர் ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியில் இரவோடு இரவாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அம்மோனியாவின் அளவு சீராக இருந்ததையடுத்து, விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். கோரமண்டல் தொழிற்சாலை ரெட் கேட்டகிரி தொழிற்சாலை ஆகும். வடசென்னை மற்றும் எண்ணூர் பகுதியில் இருக்கின்ற ரெட் கேட்டகிரி தொழிற்சாலைகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதோடு எல்லா தொழிற்சாலைகளிலும் கட்டமைப்பு சரியாக இருக்கிறதா, விபத்துக்கள் ஏற்படுகின்றபோது அதை தடுப்பதற்கான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றதா, என்பதை கண்காணிக்கவிருக்கிறோம். ஒரு குழுவை அனுப்பி இந்த ஆய்வை மேற்கொள்வோம். தற்போது அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆலையில் உள்ள சல்பூரிக் ஆசிட் இயந்திரத்தை உடனடியாக நிறுத்த முடியாது என்பதால் மெதுவாக நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை மூலம் எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை விரைவில் அறிவிக்கிறோம்.

ரெட் கேட்டகிரி தொழிற்சாலைகள் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய விரைவில் ஒரு குழு அமைக்கப்படும். வல்லுநர்களை அனுப்பி இதை பரிசீலிக்க இருக்கிறோம். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை சரி செய்ய வலியுறுத்துவோம். இனிமேல் வடசென்னை பகுதி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறோம். எண்ணூரில் எண்ணெய் கழிவினால் ஏற்பட்ட பாதிப்பு என்பது அதிகமான பாதிப்பு என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. இந்த அமோனியா கசிவால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவுதான்
இயற்கையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசியத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு வருகிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x