Published : 27 Dec 2023 09:25 AM
Last Updated : 27 Dec 2023 09:25 AM

தென்மாவட்டங்களில் ரூ.6,000 நிவாரணத் தொகை டோக்கன் விநியோகம்

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.

இது தொடர்பாக, திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க அனைத்து துறையினரும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றி தற்போது சகஜ நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அதி கனமழையின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வட்டங்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். மேலும் இவ்விரு மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களுக்கும் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1,000 வழங்கப்படும்’ என்று அறிவித்திருந்தார்.

அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. நியாய விலைக் கடை பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரில் வந்து டோக்கன்களை விநியோகிப்பார்கள். அதில் நிவாரணத் தொகை பெறும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த குறிப்பிட்ட நாளில் பொது மக்கள் நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே திருநெல்வேலியில் பல்வேறு நியாயவிலைக் கடைகளிலும் நிவாரண தொகை க்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. பொது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தங்கள் ஸ்மார்ட் கார்டுகளை காண்பித்து டோக்கன்களை பெற்றுச் சென்றனர். இதனால் ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமிருந்தது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வெள்ள நிவாரணமாக ரூ.1,000 நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடை பணியாளர்கள் வீடுகளுக்கே நேரில் வந்து டோக்கன்களை விநியோகிப்பார்கள்.

அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் நாளில் பொதுமக்கள் நிவாரணத் தொகையை நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். நியாயவிலைக் கடை பணியா ளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தென்காசி ஆட்சியர் துரை.ரவிச் சந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x