Published : 27 Dec 2023 05:25 AM
Last Updated : 27 Dec 2023 05:25 AM
நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை/ காரைக்கால்: நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவக் கிராமங்களில் 19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
2004 டிச. 26-ம் தேதி நேரிட்ட சுனாமிப் பேரழிவில் நாகை மாவட்டத்தில் 6,065 பேர் உயிரிழந்தனர். இதன் நினைவாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவிடத்தில் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 19-ம் ஆண்டு சுனாமிநினைவஞ்சலி நேற்று நடைபெற்றது. சுனாமி நினைவுத் தூணில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், எஸ்.பி. ஹர்ஷ் சிங் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதேபோல, நாகை நம்பியார் நகர் மீனவர்கள் பேரணியாகச் சென்று, அங்குள்ள சுனாமி நினைவுத் தூணில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர், பட்டினச்சேரி, சாமந்தான்பேட்டை, வேளாங்கண்ணி உட்பட 25 மீனவக் கிராமங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு திதி கொடுத்து, உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், கடலோரப் பகுதிகளில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பாஜக சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் நாகை சுனாமி நினைவுத் தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், வேளாங்கண்ணி கடைவீதியில் இருந்து சுனாமி நினைவுத் தூண்வரை ஏராளமானோர் பேரணியாகச் சென்று, பிரார்த்தனை செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பழைய ரயிலடிஅருகே சுனாமியால் உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், எம்எல்ஏ நிவேதா எம்.முருகன்,பாஜக மாவட்டத் தலைவர் க.அகோரம் உள்ளிட்டோர் அஞ்சலிசெலுத்தினர்.
காரைக்கால் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவிடத்தில் எம்எல்ஏ பி.ஆர்.என்.திருமுருகன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ், மாவட்டதுணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) வெங்கட கிருஷ்ணன், உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் சுபாஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT