Last Updated : 07 Jan, 2018 02:27 PM

 

Published : 07 Jan 2018 02:27 PM
Last Updated : 07 Jan 2018 02:27 PM

விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதி ஒருவர் பலி: 4 பேர் காயம்

விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.

ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கடந்த 4 தினங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைக் கொண்டு அரசு, பேருந்துகளை இயக்கிவருகிறது.

அந்த வகையில் விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து விருத்தாசலம் பேருந்து நிலையம் நோக்கி இரு பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிவந்துள்ளனர்.

இதனிடையே சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த சீயான்(37) என்பவர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விருத்தாசலத்திற்கு வந்துள்ளார்.

மேலும் சிலர் சென்னையில் இருந்து வந்ததால், அவர்களை அழைத்து வருவதற்காக மொபட்டில் விருத்தாசலம் பேருந்து நிலையம் சென்றார் சீஇயான்.

அங்கு காத்திருந்த சாமுவேல் மற்றும் அவரது மகள் சாரத்சிட்டி(7) ஆகியோரை அழைத்துக் கொண்டு, துக்க நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து பேருந்து நிலையம் நோக்கி சென்ற இரு பேருந்துகளுக்கு முன்னால் சென்றுள்ளார்.

திடீரென தற்காலிக ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய பேருந்து, முன்னால் சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதே வேகத்தில் முன்னால் சென்று பேருந்து மொபட் மீது மோதியது. இதில் மொப்பட்டை ஒட்டிச் சென்ற சீயான் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேலும் சாராத்சிட்டி மற்றும் சாமுவேல் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயம்பட்டவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த சீயான் உடல் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

போக்குவரத்துக் கழகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்தை இயக்குவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்தும் அரசுப் போக்குவரத்துக் கழக விருத்தாசலம் பணிமனை தொழிலாளர்கள் பணிமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விபத்தைக் கண்டித்து விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x