Published : 18 Jan 2018 01:47 PM
Last Updated : 18 Jan 2018 01:47 PM
மதுரையில் பூட்டிய வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, சிசிடிவி கேமராவை பொருத்தி கண்காணிக்கும் முறையை விரைவில் மாநகர காவல் துறை அமல்படுத்தப்படவுள்ளது.
மதுரை நகர் பகுதியில் 21 காவல் நிலையங்கள் உள்ளன. போலீஸார் பற்றாக்குறை இருந்தாலும், குற்றங்களைத் தடுக்க தற்போது பணியிலுள்ள போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
எனினும், வழிப்பறி, வீடு, கடைகளுக்குள் புகுந்து திருடுவது போன்ற குற்றச் செயல்கள் நடப்பதை தடுக்க முடியவில்லை. மதுரை புறநகரையொட்டிய அண்ணாநகர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம், கூடல்புதூர், தல்லாகுளம் போன்ற காவல்நிலைய எல்லைகளில் அடிக்கடி குற்றச்செயல்கள் நடப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சமீபகாலமாக பூட்டிய வீடுகளை குறிவைத்து நடைபெறும் திருட்டுக்கள் அதிகரித்துள்ளதால், வெளியூர் செல்வதற்கே மக்கள் தயங்குகின்றனர். இது போன்ற சூழலில் மதுரை புறநகர் பகுதியில் பூட்டிய வீடுகளை போலீஸார் கண்காணிக்கும் வகையில், ‘மதுரை காவலன்’ என்ற புதிய திட்டம் அமல் படுத்தி உள்ளனர்.
ஆண்ட்ராய்டு செல்போனில் இப்புதிய ‘ஆப்’ பை பதிவிறக்கம் செய்து, வெளியூர் பயணம் செல்லும்போது, அதில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு முகவரியுடன் தகவல் தெரிவிக்கலாம். இதன் மூலம் பூட்டிய வீடுகள் போலீஸாரால் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புதிய முறை
இந்நிலையில், மதுரை நகர் பகுதியில் பூட்டிய வீடுகளில் நடக்கும் திருட்டுகளை தடுக்க சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை அமல்படுத்த மாநகர் காவல்துறை திட்டமிட்டுள்ளது. வெளியூர் செல்லும் நபர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட வீட்டின் அருகில் ரகசிய இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மதுரை நகர் பகுதியில் பூட்டிய வீடுகள், திருவிழா, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, நவீன வடிவிலான சிறிய கேமராக்களை பூட்டிய வீடுகளுக்கு அருகில் நான்கு திசைகளை கண்காணிக்கும்படி ரகசிய இடத்தில் குறிப்பிட்ட நேரம், நாட்கள் வரை பொருத்தப்படும். இதில் 4 மணி நேர செயல்பாடுகளை சேகரிக்கும்படியான ‘மெமரி கார்டு’ ஒன்றும் உள்ளது. இந்த கேமராவின் செயல்பாடு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலுள்ள ஒருவரின் ஆண்ட்ராய்டு மொபைல்போன் அல்லது கம்ப்யூட்டரில் இணைத்து அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
திருட்டு முயற்சி நடந்தால், அது தொடர்பாக உடனடியாக தெரியவரும். இதன் வழியாக போலீஸார் உஷார்படுத்தப்பட்டு குற்றச் செயலை தடுக்கலாம். கேமராவில் உள்ள மெமரியில் பதிவான காட்சிகளைக்கொண்டு திருடர்களை பிடிக்க முடியும்.
இந்த வசதி மதுரை நகரில் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான ஒத்திகை நகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்துள்ளது.
விரைவில் இப்புதிய திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இத்திட்டம் சிறப்பாக செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT