Published : 26 Dec 2023 04:55 PM
Last Updated : 26 Dec 2023 04:55 PM
கோவை: “ஆட்சியில் இருந்தபோது நடந்த தவறுகளை நான் வெளிப்படுத்தினால் திஹார் சிறைக்குதான் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செல்ல வேண்டும்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கோவை சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.26) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, "பாஜகவுடன் எங்களுக்கு உறவு சீராக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார். எனவே, மீண்டும் அவர் பிரதமராக வந்தால் நாடு நன்றாக இருக்கும். அந்த எண்ணத்தில்தான் செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். இதுதான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு. அரசியல் ரீதியாக பழனிசாமி இனி மேலே வரவே முடியாது” என்றார்.
அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகளை வெளியில் சொன்னால் பழனிசாமிக்கு திஹார் சிறைதான் என மேடையில் பேசியது குறித்த கேள்விக்கு, "அதிமுக ஆட்சியின்போது சில தவறுகள் உள்ளே நடந்தன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடித்து, தண்டிப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் சொன்னார். அதில் ஆறு கொலைகள் நடந்துள்ளன. ஒன்றும் செய்யவில்லை. சில அரசியல் ரகசியங்கள் உண்மையில் இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியுமா?” என்றார்.
தனி கட்சி தொடங்கவில்லை: முன்னதாக, தொண்டர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "பழனிசாமி முதல்வராக இருந்தபோது என்னென்ன செய்தார் என்பது எனக்கு நன்றாக தெரியும். அப்போது நான் கையெழுத்திட்டுதான் கோப்புகள் அனைத்தும் அடுத்தடுத்து செல்லும்.
நான் அந்த ரகசியங்களை வெளியில் சொன்னால், திஹார் சிறைக்குதான் பழனிசாமி செல்ல வேண்டும். அதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் தனி கட்சி தொடங்குங்கள் என என்னிடம் பலர் கூறுகின்றனர். அதிமுக எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறுவதற்குதான் நான் அரசியல் கடமையாற்றுவனே ஒழிய, தனி கட்சி தொடங்க எந்நாளும் நான் முன்வர மாட்டேன். இதுதான் என்நிலைப்பாடு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT