Published : 26 Dec 2023 04:25 PM
Last Updated : 26 Dec 2023 04:25 PM
சென்னை: "வேங்கைவயல் சம்பவம் நடந்து ஓராண்டு கடந்து விட்டது, முதல்வர் ஸ்டாலின் அவர்களே, இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூக நீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் உங்கள் உண்மை முகம் அம்பலப்பட்டு ஓர் ஆண்டு ஆகிறது. பொதுமக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே பார்க்கும் திமுகவின் கோரமுகம் முழுவதுமாக வெளிப்பட்டு ஓராண்டாகிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில், "வேங்கைவயல் சம்பவம் நடந்து ஓராண்டு கடந்து விட்டது, முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூக நீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் உங்கள் உண்மை முகம் அம்பலப்பட்டு ஓர் ஆண்டு ஆகிறது. பொதுமக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே பார்க்கும் திமுகவின் கோரமுகம் முழுவதுமாக வெளிப்பட்டு ஓராண்டு ஆகிறது.
தமிழகத்தில், 30% பள்ளிகளில், பட்டியல் சமூக மாணவர்களுக்கு எதிராக சாதிய வேற்றுமை, தீண்டாமை நிலவுகிறது என்று, நாளிதழ் செய்தி ஒன்று வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், இன்னும் மேடைகளில், சமத்துவம் சமூக நீதி என்றெல்லாம், யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் உங்கள் முகத்துக்கு நேராகவே சிரிக்கிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக, மத்திய அரசு பட்டியல் சமூக மக்கள் நலனுக்காக ஒதுக்கும் நிதியை எடுத்து, உங்கள் வாக்கு அரசியலுக்காக வேறு திட்டங்களுக்குச் செலவிட்டீர்கள் அல்லது செலவே செய்யாமல் திருப்பி அனுப்பினீர்கள். பொதுமக்களுக்கு அதன் வீரியம் புரியவில்லை. காலங்காலமாக நீங்கள் நடித்து வரும் மேடை நாடகங்களை நம்பியிருந்தார்கள். ஆனால், இனியும் அவர்கள் ஏமாறத் தயார் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கடந்த ஆண்டு டிச.26-ம் தேதி தெரியவந்தது. இந்தக் கொடுஞ்செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் சாட்சிகள் யாரும் இல்லாததால், குற்றவாளி களை கண்டறிய முடியவில்லை. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கைசிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதுவரை 221 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில், 31 பேர்டிஎன்ஏ பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டனர். அதில் இருந்து, 10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. முழுமையாக வாசிக்க > வேங்கைவயல் சம்பவம் | இன்றுடன் ஓராண்டு நிறைவு: விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT