Published : 26 Dec 2023 05:23 PM
Last Updated : 26 Dec 2023 05:23 PM

“என்ன செய்யப் போகிறோம்?!” - எழவே முடியாமல் தவிக்கும் தாமிரபரணி கரையோர குடும்பங்கள்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி வெள்ளம் புரட்டிப்போட்ட பகுதிகளில் ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன. ஒவ்வொருவரின் இழப்பும் ஒவ்வொரு வித சோகமயமானது. பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களில் ஒரு சிலரை இங்கு பதிவு செய்திருக்கிறோம்.

கலையரசி

“உதவியில்லாமல் வாழ இயலாது” - கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெரு கலையரசி: வீட்டு வேலைக்கு செல்கிறேன். எனது கணவர் பெயின்டிங் வேலைக்கு செல்கிறார். மகனும், மகளும் பள்ளியில் படிக்கிறார்கள். வெள்ளத்தில் இடிந்த வீட்டில் இனி தங்க முடியாது. இதே பகுதியில் 4,000 ரூபாய் வாடகை வீட்டில் தங்கியிருக்கிறோம். வீடு கட்டும் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை. வீடு வெள்ளத்தினால் இடிந்து விட்டது. அரசு ஏதாவது உதவி செய்தால் மட்டும் தான் எங்களால் மீண்டு எழ முடியும்.

மாரிமுத்து - உலகம்மாள் தம்பதி

“உடமைகள் அனைத்தும் போய்விட்டன” - தச்சநல்லூர் உலகம்மன் கோயில் வடக்குத் தெரு மாரிமுத்து - உலகம்மாள் தம்பதி: வீட்டுவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம். இப்பகுதியில் உள்ள குளம் உடைப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் எங்களின் வீடு முற்றிலும் சேதமடைந்தது. திருமணமான மகன், மகள் ஆகியோருடன் மூன்று குடும்பங்கள் இந்த வீட்டில் வசித்தோம். வீட்டை இழந்தபின் அருகில் உள்ள மண்டபங்களிலும், கோயில்களிலும் தங்கினோம். எங்கள் உடமைகள் அனைத்தும் வெள்ளத்தில் போய்விட்டன. தற்போது 3,000 ரூபாய் கொடுத்து வாடகை வீட்டில் இருக்கிறோம். மற்ற உடமைகளை வேலை செய்து வாங்கிக்கொள்வோம் ஆனால் வாடகை கொடுக்க இயலாது. அரசு வீடு கட்டுவதற்கு உதவி செய்ய வேண்டும்.

தள்ளாத வயதில் தவிக்கும் குடும்பம்: கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவில் முக்கால்வாசி இடிந்து போன வீட்டுக்கு மத்தியில் 83 வயதான சுடாலியம்மாள் உடல்நலமின்றி கவலைக்கிடமான நிலையில் கட்டிலில் படுத்திருந்தார். சுற்றிலும் சேறும், குப்பையுமாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னரே இவரது கணவர் இறந்து விட்டார். இரு மகன்களில் குமரவேல் மட்டும் கூலி வேலைக்கு செல்கிறார். மற்றொரு மகனும், மகளும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். மூவருக்கும் 50 வயது கடந்துவிட்டது. திருமணமாகவில்லை. சரிந்து கிடக்கும் ஓட்டுக்கூரை வழியே சூரியஒளி விழுகிறது. முழுவதும் ஈரத்துடன் காணப்படும் சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளன. வீட்டுக்குள் படிந்துள்ள சேற்றை சுத்தப்படுத்தவும் முடியாத நிலையில் உள்ளனர்.

தங்களுக்கு என்ன தேவை என்று கூட சொல்லத் தெரியவில்லை. சுடாலியம்மாள் கூறும்போது, “வெள்ளம் வந்தபோது பக்கத்து வீட்டு மாடியில் தங்கினோம். சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார்கள். தற்போது உடல் நிலை சரியில்லை. இனி எங்கு போகப் போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்? என்று தெரியவில்லை” என்று அழுதவாறு கூறினார். அப்பகுதி இளைஞர்கள் கூறும்போது, “எங்களது பகுதிக்கு நடமாடும் மருத்துவ வாகனம் வந்தது. ஆனால் சரியான வகையில் இங்குள்ளவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கவில்லை. தெருவில் வந்தவாறு சென்று விட்டது. சுடாலியம்மாள் பாட்டிக்கு மருத்துவ உதவி அளிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அவர்களது வீட்டினை யாராவது சரிசெய்து கொடுத்தால் அவர்களின் துயரம் தீரும்” என்று கூறியது, வேதனையளிக்கும் வகையில் இருந்தது.

பரமசிவன்

“எத்தனை நாட்கள் அடுத்த வீட்டில் தங்குவது?” - கைலாசபுரம் துவரை ஆபீஸ் தெரு பரமசிவன்: இட்லி கடையில் வேலை பார்க்கிறேன். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு இடம் பெயர்ந்தோம். மழை மற்றும் வெள்ளம் வடிந்ததும் வந்து பார்த்தபோது வீடு இடிந்து கிடந்தது. வெள்ளம் வந்தபோது முகாமில் இடமும், உணவும் கிடைத்தது. ஆனால் தற்போது அது இல்லை. அதனால் அருகில் உள்ள எனது அண்ணனின் சிறிய வீட்டில் இரவு மட்டும் படுத்து தூங்குகிறோம். எவ்வளவு நாள் தங்க முடியும்? எனது மகன் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுகிறார். இந்த நிலையில் எனது வீட்டினை எப்படி சரி செய்து குடியிருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.

வெள்ளத்தாய்

“இடிந்த வீடானாலும் வேறுவழியில்லை” - இடிந்த வீட்டுக்கு மத்தியில் சமையல் செய்து கொண்டிருந்த தச்சநல்லூர் உலகம்மன் கோயில் வடக்குத் தெரு வெள்ளத்தாய்: கணவரை இழந்த பின்னர், குழந்தைகளுடன் இந்த வீட்டில் வசித்து வந்தேன். வீட்டு வேலைகள், கூலி வேலைக்கு சென்று நானும், குழந்தைகளும் பிழைக்கிறோம். தற்போது எங்கள் வீடு இடிந்து விழுந்து விட்டது. வேறு இடத்துக்கு இடம் மாறுவதற்கு எங்களுக்கு வசதி இல்லை. அதனால் பழைய ஆஸ்பெடாஸ் தகடு மற்றும் பேனர்களைக் கொண்டு கூரை அமைத்து, கதவு இல்லாத இந்த வீட்டிலேயே இருக்கிறோம். அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக எங்களுக்கு வீடு கட்டி தந்தால் நன்றாக இருக்கும்.

மாரியம்மாள்

“வாடகை கொடுக்க இயலாது” - குருந்துடையார்புரம் அருகே உள்ள காமராஜர் நகர் மாரியம்மாள்: இரண்டு மகன்கள் மற்றும் மகளுடன் வசித்து வந்த வீடு இடிந்து விட்டது. கூலி வேலைக்கு சென்று பிழைக்கிறோம். வாடகை கொடுத்து குடியிருக்க எங்களுக்கு வசதியில்லை. சேதமடைந்த வீட்டிலேயே சமையல் செய்து, பகல் முழுக்க இருக்கிறோம். எங்கள் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டு அருகில் உள்ளவர்கள் இரவு தங்குவதற்கு இடம் கொடுத்து உதவியிருக்கிறார்கள். நல்ல உள்ளம் கொண்டவர்கள் வீட்டை சரிசெய்து கொடுத்தால்தான் மீண்டு எழ முடியும்.

புதுமாடத்தி

“மீண்டும் வீடு கட்ட வசதி வேண்டாமா?”- தச்சநல்லூர் புதுமாடத்தி: இங்குள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்கிறேன். என்னுடைய கணவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். வெள்ளம் பாதிப்பில் எங்களது வீடு முற்றிலும் தரைமட்டமாகியது. இருக்க இடம் இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறோம். மேற்கொண்டு வீடு கட்டுவதற்கு எந்தவிதமான வசதியும் எங்களிடம் இல்லை. வீடு கிடைக்காமல் 4000 ரூபாய் வாடகைக்கு குழந்தைகளுடன் குடியிருக்கிறோம். எங்களுக்கு அரசுதான் ஏதாவது உதவி செய்ய வேண்டும்.

ஜானகி

“மாற்றுச் சேலை கூட கிடையாது” - கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெரு ஜானகி: வெள்ளம் வருகையில் வெளியூருக்கு சென்றிருந்தேன். அதனால் எனது பொருட்களை மீட்கமுடியவில்லை. உடுத்துவதற்கு மாற்றுச்சேலை கூட கிடையாது. எல்லா பொருட்களும் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்துவிட்டன. இடிபாடுகளுக்குள் இருக்கும் பொருட்களை மீட்கவும் முடியவில்லை. எனது கணவர் இறந்து விட்டார். எனது மகள்கள் திருமணமாகி இதே பகுதியில் இருக்கிறார்கள். அவர்களது வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனது உறவினர் வீட்டில் இரவு தூங்க மட்டும் செல்கிறேன். எவ்வளவு நாள் என்று தெரியவில்லை. யாராவது வீடுகட்ட உதவினால் நன்றாக இருக்கும்.

வெள்ளத்தாய்

“கணவரை இழந்து மகனுடன் தவிக்கிறேன்” - கைலாசபுரம் துவரை ஆபீஸ் தெரு வெள்ளத்தாய்: எனது கணவர் இறந்து விட்டார். பழ வியாபாரம் செய்து நானும், எனது மகனும் பிழைப்பு நடத்துகிறோம். 35 ஆண்டுகளாக இந்த வீட்டில்தான் வசிக்கிறேன். இதற்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தில் எங்கள் வீடு ஒன்றும் ஆகவில்லை தற்போது வீடு முற்றிலும் இடிந்து விட்டது. வீட்டுக்குள் நுழையக்கூட முடியவில்லை அந்தளவுக்கு இடிந்து விட்டது. தற்போது நாங்கள் 4,000 ரூபாய் கொடுத்து வாடகை வீட்டில் வசிக்கிறோம். மேற்கொண்டு என்ன செய்யப் போகிறோமோ? | செய்தி, படங்கள்: மு.லெட்சுமி அருண்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x