Published : 26 Dec 2023 04:02 PM
Last Updated : 26 Dec 2023 04:02 PM
சென்னை: "சிறுபான்மை மக்களை அரண் போல் காக்கும் கட்சி அதிமுக. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு, முதல்வர் ஸ்டாலினுக்கு தூக்கமே போய்விட்டது. காரணம், சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் சிறுபான்மை மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. எனவே, சிறுபான்மை மக்கள் வாக்குகள் சிதறிவிடும் என்ற அச்சத்தில், முதல்வர் ஏதேதோ புலம்பிக் கொண்டிருக்கிறார்" என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசயுள்ளார். மேலும், மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சி செய்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் தமிழகத்தை பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (டிச.26) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆன பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் வரவேற்பு பேனர்கள் முதல் கூட்ட அரங்கு வரை எல்லாவற்றிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார் எடப்பாடி பழனிசாமி. அவர் பேசுகையில், "26 கட்சிகள் உடன் சேர்ந்து இண்டியா கூட்டணி அமைத்துள்ளனர். பல்வேறு கருத்து வேற்றுமைகள் கொண்ட கட்சிகள் எல்லாம் இந்தக் கூட்டணியில் ஒன்றாக இணைந்துள்ளனர். அந்த கூட்டணியில் 19-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒரு புகைச்சல் வந்துவிட்டது.
அந்தக் கூட்டத்தில், நிதிஷ் குமார் பேசும்போது இந்தியில் பேசுகிறார். அப்போது திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறும்படி கேட்கிறார். அதற்கு மறுத்துவிட்ட நிதிஷ் குமார், ‘வேண்டும் என்றால் இந்தி கற்றுக்கொண்டு வாருங்கள்’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுதான் இண்டியா கூட்டணியின் நிலை. இப்போதே புகையத் துவங்கிவிட்டது. எப்போது பார்த்தாலும், திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் தமிழ், தமிழ் என்று பேசுவார். அங்கே ஏன் குரல் கொடுக்கவில்லை? இதுதான் திமுகவின் இரட்டை வேடம். அது தற்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
அதுபோல், அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை, மக்கள்தான் எஜமானா்கள். மக்களுக்குக்காகத்தான் கட்சி, மக்களுக்காகத்தான் அரசாங்கம். பிரதமருக்காக அல்ல. தமிழக மக்கள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அந்த பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்கு அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். எங்களுக்கு வாக்களித்த மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதான எண்ணம்.
அதேபோல், தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களைக் கொண்டு வரவேண்டும். தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும். தமிழக வளர்ச்சிப் பெற வேண்டும். எனவேதான், அதிமுக பிரதமர் யார் என்று பார்க்கவில்லை. வாக்களிக்கும் மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். ஏதோவொரு கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். அவர்களும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள். தமிழக மக்களுக்கு விரோதமான செயல் அல்லது பாதிக்கப்படும் செயல்கள் வரும்போது, கூட்டணி தர்மம் என்ற நிலையில் அதை புறந்தள்ளிவிடுகின்றனர். அந்த சமயத்தில் நாம் பாதிப்படைகிறோம். இனி அந்த நிலை கிடையாது.
இன்றைக்கு தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. அதிமுகவைப் பொறுத்தவரை, வாக்களிக்கும் மக்களே எஜமானா்கள். அந்த மக்களுக்கு தேவையானவற்றை, அதிமுக சார்பில் வெற்றி பெறும் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள். அதிமுக ஆட்சியில் சுமார் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அந்த சமயத்தில் காவிரி நதி நீர் பிரச்சினை வந்தது. அப்போது அதிமுக உறுப்பினர்களால் 22 நாட்கள் நாடாளுமன்றமே ஒத்திவைக்கப்பட்டது. இது அதிமுகவின் சாதனை. நீட் தேர்வு குறித்து பேசும் திமுகவுக்கு, நீட் தேர்வு விவகாரத்தை எழுப்பி, நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் தெம்பு, திராணி திமுகவுக்கு இருக்கிறதா? கிடையாது.
சிறுபான்மை மக்களை அரண் போல் காக்கும் கட்சி அதிமுக. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு, முதல்வர் ஸ்டாலினுக்கு தூக்கமே போய்விட்டது. காரணம், சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் சிறுபான்மை மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. எனவே, சிறுபான்மை மக்கள் வாக்குகள் சிதறிவிடும் என்ற அச்சத்தில், முதல்வர் ஏதேதோ புலம்பிக் கொண்டிருக்கிறார்.
முதல்வரே, நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். பாஜகவின் கூட்டணியில் அதிமுக இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டோம். ஏற்கெனவே, 25.9.2023 அன்று தலைமைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு அது. அந்த முடிவின் அடிப்படையில் பாஜகவுடன் அதிமுக இனி கூட்டணியில் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டோம். சிறுபான்மை மக்கள் விழித்துக் கொண்டார்கள். அதிமுகதான் அவர்களை அரண் போல காக்கும் கட்சி என்பதை உணர்ந்துகொண்டார்கள். இதனால், முதல்வர் ஸ்டாலின் பிதற்றிக் கொண்டிருக்கிறார். அச்சத்தில் துடித்துக் கொண்டிருக்கிறார்.
திமுக அரசாங்கம் ஒரு அரசாங்கம் அல்ல. இது ஒரு குழு அரசாங்கம். எதற்கு எடுத்தாலும் ஒரு குழு அமைத்துவிடுவார். அதோடு எல்லாம் முடிந்துவிடும். குழு அமைப்பதுதான் இந்த முதல்வரின் வேலை. அதிமுக மாநாடு ஆகஸ்ட் மாதம் மதுரையே குலுங்கும் அளவுக்கு நடந்து முடிந்தது. எதிரிகள் அஞ்சுகின்ற அளவுக்கு நடந்த மதுரை மாநாட்டை பற்றி, உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசியிருக்கிறார். உதயநிதி சொன்னதில் இருந்து திமுகவின் சேலம் மாநாடு மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. அதிமுகவை விமர்சிக்கும்போதே உங்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அரசியல் கத்துக்குட்டியாக இருந்துகொண்டு அதிமுகவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது 520 அறிவிப்புகளை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். ஆனால் இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. செயலாற்றாத அரசாக திமுக அரசு உள்ளது. பொம்மை முதலமைச்சர் இன்றைக்கு தமிழகத்தை ஆளுகிறார். அதனால் மக்கள் படுகின்ற துன்பம் ஏராளம். இந்த ஆட்சியின் சாதனை என்றால் ஊழல் செய்வதில் சாதனை படைத்துள்ளதை தவிர வேறு எதுவும் கிடையாது. அண்மையில் ஒரு அமைச்சருக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்துள்ளது. இன்னும் பல அமைச்சர்கள் தண்டனை கிடைக்க காத்திருக்கிறார்கள். சட்டமன்றத்தில் முன்னணி வரிசையில் அமர்ந்துள்ள அமைச்சர்கள் பலரும் மக்களை பார்க்காமல், நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்குள் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் அமைச்சர்கள் இருப்பார்கள்.
முதல்வர் ஸ்டாலினே அவருடைய கட்சியை பற்றி புலம்பிக்கொள்கிறார். இவர் எங்கு நாட்டுக்கு நல்லது செய்ய போகிறார். ஸ்டாலினுக்கு கட்சியையும் நடத்த தெரியவில்லை, ஆட்சியையும் நடத்த தெரியவில்லை. அதனால் தான் பொம்மை முதல்வர் என்கிறோம். திமுக அரசுக்கு இறங்குமுகம் தொடங்கிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இன்றைக்கு உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நிலை.
தமிழகத்தில் விவசாயிகள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளார்கள். பேரிடரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை. விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது. செய்யாறு சிப்காட்டுக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்தப்பட பார்க்கிறது. போராடியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்கிறார்கள். இதற்கெல்லாம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயிகள் பதிலடி கொடுப்பார்கள்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏகப்பட்ட இயற்கை சீற்றங்கள் வந்தன. ஆனால், புயல் பாதிப்பை புயல் வேகத்தில் செயல்பட்டு பாதிப்பின் அடிசுவடே தெரியாத அளவுக்கு அதிமுக பணி செய்தது. மிக்ஜாம் புயலின்போது திமுக அரசு திட்டமிட்ட செயல்படாத காரணத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் சென்னை தண்ணீரில் தத்தளித்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா உணவகத்தை மூடியது இந்த அரசு. இதனால், மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான உணவு கொடுக்க முடியவில்லை.
தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என முன்கூட்டியே அறிவித்தும், இந்த அரசாங்கம் தூங்கிக்கொண்டிருந்த காரணத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். எட்டு நாட்கள் ஆகியும் தென் மாவட்டங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார். வாக்களித்த மக்களை பார்க்க முதல்வருக்கு நேரமில்லை. வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு கொடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்காததால் மக்கள் உயிரிழந்துள்ளனர். 2015 வெள்ளப் பாதிப்பு குறித்து தவறான தகவலை ஸ்டாலின் அளிக்கிறார். செம்பரம்பாக்கம் ஏரியில் ஒருலட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது என பொய் சொல்கிறார். செம்பரம்பாக்கம் ஏரியில் 35,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும்.
எப்போது பார்த்தாலும் நிதியில்லை எனக் கூறுகிறது திமுக அரசு. நிதி ஆதாரத்தை பெருக்க இந்த அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவின் பணி ரூ.2,35,000 கோடி கடன் வாங்கியது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது. மத்திய அரசு உதவியை எதிர்பார்க்க கூடாது. மத்திய அரசை குறை சொல்லி மாநில அரசு தப்பிக்க பார்க்கிறது. அதேபோல் மத்திய அரசும் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து தேவையான நிதி ஒதுக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சி செய்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் தமிழகத்தை பார்க்கிறார்கள். மாநில அரசு கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுத்த வரலாறு கிடையாது. மத்திய அரசு மனிதாபிமானத்தோடு மாநில அரசுக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும். மக்கள் பாதிக்கப்படும்போது உதவி செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் கடமை" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT