Last Updated : 26 Dec, 2023 03:18 PM

 

Published : 26 Dec 2023 03:18 PM
Last Updated : 26 Dec 2023 03:18 PM

“பாஜக ஏஜெண்டாக ஆளுநர் தமிழிசை அரசியல் செய்கிறார்” - நாராயணசாமி சரமாரி தாக்கு

நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: “புதுச்சேரி, தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் வேலையை பார்க்கவில்லை. தமிழகம், புதுச்சேரியில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சியை முடக்குகின்ற வேலையை பார்க்கிறார். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை விமர்சனம் செய்வதையே அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்” என்று நாராயணசாமி கடுமையாக சாடியுள்ளார்.

புதுச்சேரியில் 19-ம் சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன் உள்ளிட்டோர் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியது: "சுனாமியில் இருந்து மீனவ சமுதாய மக்கள் இன்னும் மீண்டுவர முடியாமல் இருக்கின்றனர். மத்தியில் பாஜக ஆட்சி வந்த பிறகு மீனவ சமுதாய மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு இருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட சலுகைககள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மீனவர்களுக்கு தனி அமைச்சரகத்தை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி சொன்னாரே தவிர செய்யவில்லை. விவசாயத் தறை அமைச்சருக்கு பொறுப்பை கொடுத்துள்ளார்.

மீனவர்களுக்கு புதிதாக 64 திட்டங்கள் என்று சொல்லி ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசிடம் இருந்து எந்தெந்த திட்டங்கள் புதுச்சேரி மாநிலத்துக்கு நிறைவேற்ற முடியுமோ அவை முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றது. மீனவர்கள் தங்களை பட்டியலினத்தவராக சேர்க்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். அதனை செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இண்டியா கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். பிரதமர் வேட்பாளர் என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெளிவாக கூறியிருக்கிறார். ஆகவே, இப்போது பிரதமர் வேட்பாளர் சர்ச்சை இண்டியா கூட்டணியில் இல்லை.

புதுச்சேரி, தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் வேலையை பார்க்கவில்லை. தமிழகம், புதுச்சேரியில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சியை முடக்குகின்ற வேலையை பார்க்கிறார். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை விமர்சனம் செய்வதையே அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் பூகம்பம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். அது இயற்கை பேரிடர். அதனை சீர் செய்ய நரேந்திர மோடிக்கு இரண்டு வருடங்கள் ஆனது. குஜராத்தில் புயல் வெள்ளத்தில் பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், அதைப் பற்றியெல்லாம் தமிழிசை பேசுவதில்லை. தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வெலி பகுதிகளில் வரலாறு காணாத அளவிலான மழை ஒரே நாளில் பெய்துள்ளது. இதனை சமாளிக்க முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அதிகாரிகள் இரவு, பகல் பாராமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றனர். அது அவருக்கு கண்ணுக்கு தெரியவில்லை. பாஜகவின் ஏஜெண்டாக தமிழிசை சவுந்தராஜன் செயல்படுகிறார். நரேந்திர மோடியின் கைக்கூலியாக இருக்கிறார். அவர் அரசு செய்யும் நல்லதை பாராட்டுவதில்லை.

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் மாளிகை பாஜகவின் தலைமை அலுவலகமாக இருக்கிறது. 24 மணி நேரமும் அரசியல் செய்கின்றனர். தனது பணியை செய்வதை தவிர மற்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களில் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தலில் நிற்க வேண்டும், அரசியலுக்கு வர வேண்டும் என்றால் வாருங்கள்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட பதவியை வைத்துக் கொண்டு, அரசியல் கட்சிகளை, முதல்வரை விமர்சிப்பதும், தமிழக மக்களை கொச்சையாக பேசுவதும் ஆளுநர் பதவிக்கு அழகல்ல. இதனை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, தெலங்கானா மற்றும் தென் மாநிலங்களில் எங்கு நின்றாலும் அவர் டெபாசிட் வாங்க மாட்டார். பாஜகவும் வாங்காது. ஆகவே பாஜகவுக்கு வக்காலத்து வாங்குவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x