Published : 26 Dec 2023 03:07 PM
Last Updated : 26 Dec 2023 03:07 PM
சென்னை: சென்னை அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை நோக்கிச் செல்லும் சாலையில், முதலாவது சிக்னலில் வலது புறம் திரும்பும் சாலை தான் சோளம்பேடு சாலை. அங்கிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பரப்பளவு சென்னைமாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. அதன்பிறகு, ஆவடி மாநகராட்சி தொடங்கி விடுகிறது. அதன்படி, சோளம்பேடு சாலை, சென்னை மாநகராட்சியையும், ஆவடி மாநகராட்சியையும் இணைக்கிறது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படாது என்ற ஒரே காரணத்தால், அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் இருந்து திருமுல்லைவாயில் செல்வோரும், திருமுல்லைவாயிலில் இருந்து அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு பகுதிகளுக்கு செல்வோரும் இந்த சோளம்பேடு சாலையையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக, ‘பீக் அவர்ஸ்’ எனப்படும், காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் சென்று வருவோர் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துவதால், அந்த நேரங்களில் சோளம்பேடு சாலை பரபரப்பாக காணப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்காது, செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாக சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இந்த சாலையை பயன்படுத்தி வந்தவர்கள், தற்போது இச்சாலை குண்டும் குழியுமாக உருமாறியுள்ளதால் வேறு திசையில் செல்கின்றனர். இந்த சாலையில் விலையுயர்ந்த வாகனத்தில் பயணித்தாலும், ஏதோ குதிரைமேல் உட்கார்ந்து சவாரி செய்வது போல அலுங்கி குலுங்கி போகிறார்கள்.
சாலை இந்த அளவு மோசமடைய காரணம், அதன் அருகில் நடைபெற்று வரும் வடிகால்வாய் அமைக்கும் பணிதான் என வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் குற்றம்சாட்டுகின்றனர். ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சோளம்பேடு சாலையில், கண்ணன் தியேட்டர் பகுதியில் இருந்து சாலையின் ஓரம் உள்ள கால்வாய் விரிவுப்படுத்தி, தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது, அங்கு மந்த கதியில் பணிகள் நடப்பதாகவும், அந்த பணிகளால் மோசமடைந்த சாலைகளையும் சரி செய்யவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. இந்த வடிகால்வாய் அமைக்கும் பணிகளால், அதன் அருகில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளும் கடைகளை திறக்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மேலும், குண்டும் குழியுமான சாலைகளில் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுவதாகவும், குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் வரும் பெண்கள், அடிக்கடி கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து காயத்தால் அவதிப்படுவதாகவும் அந்த பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே, உடனடியாக கால்வாய் பணிகளை விரைந்து முடித்து, புதிதாக சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அம்பத்தூர் ஓடி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாலமுருகன் கூறியதாவது: சோளம்பேடு மெயின் ரோடு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளால் அந்த சாலையை பயன்படுத்தவே முடியவில்லை. சுமார் 3 மாதங்களாக இந்த சாலை, சேதமடைந்து மிக மோசமாக உள்ளது. தற்போது பெய்த மழையின்போது கூட, சாலை சேறும் சகதியுமாக காட்சிஅளித்தது. பலர் வழுக்கி விழுந்து காயமடைந்தனர். திருமுல்லைவாயில் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் வெளியே செல்லும் வகையில் வடிகால்வாய் விரிவுப்படுத்தும் பணிகளால், கனமழையின் போது, கால்வாய் வழியே வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள கடைகளுக்குள் புகுந்தது.
மேலும், கண்ணன் தியேட்டர் பகுதி அருகில் மிக ஆபத்தான நிலையில், கால்வாயில் பள்ளம் தோண்டப்பட்டு எந்த பணிகளும் நடைபெறாமல் கிடக்கிறது. இதனால், இந்த சாலை வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக மாறி உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
திருமுல்லைவாயிலை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விக்னேஷ் கூறியதாவது: வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத வகையில் சோளம்பேடு சாலை படுமோசமாக மாறி உள்ளது. சாலையில் பள்ளம் என்பதை விட, பள்ளத்தில் தான் சாலையே இருக்கிறது என்று கூறலாம். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். மழைக்காலத்தில் இந்த சாலையில் செல்வோரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. கால்வாய் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால், ஏற்கனவே, கட்டி வைத்திருந்த தடுப்புகளும் உடைந்து கீழே சரிந்து கிடக்கிறது.
இதனால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. சாலையோரம் குவிக்கப்பட்டு கிடக்கும் கற்கள் சாலை நடுவே வரை பரவி கிடப்பதாலும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் சறுக்கி விழுகின்றனர். உடனடியாக இந்த சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு வழி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். மழைக்காலத்தில் இந்த சாலையில் செல்வோரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT