Published : 26 Dec 2023 03:06 PM
Last Updated : 26 Dec 2023 03:06 PM
சென்னை: கடந்த 27 ஆண்டுகளாக திருநின்றவூர் நகராட்சியில் ஒரு தெருவில் மட்டும் சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாமல் ஓரவஞ்சணை காட்டப்படுவதாக அங்கு வசிக்கும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த திருநின்றவூர் கடந்த 2021-ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. எனினும், தரம் உயர்ந்த அளவுக்கு திருநின்றவூரில் அடிப்படை வசதிகளின் தரம் உயரவில்லை. குறிப்பாக, திருநின்றவூர் நகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட ஒரு தெருவில் கடந்த 27 ஆண்டுகளாக சாலைமற்றும் கழிவு நீர் வசதி செய்யப்படாமல் நகராட்சி நிர்வாகம் ஓரவஞ்சனை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி பொதுநலச் சங்க தலைவர் எஸ்.முருகையன் கூறியதாவது: திருநின்றவூர் நகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் 1-வது குறுக்குத் தெரு மேற்குப் பகுதி முட்டு சந்தாக உள்ளது. பழைய காவல் நிலையம் இருந்த இத்தெருவில் 10 வீடுகள் உள்ளன. மேலும், இத்தெரு தாழ்வான பகுதியாக இருப்பதால், மழைக் காலங்களில் இத்தெருவில் தேங்கும் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது.
அத்துடன், 2-வது மெயின் தெருவில் செயல்பட்டு வரும் இரு வங்கிக் கட்டிடங்களில் இருந்துவெளியேறும் மழைநீர் அத்தெருவில் விடாமல்,பின்பக்கத்தில் உள்ள எங்கள் தெருவில் விடப்படுகிறது. மேலும், 2-வது மெயின் தெரு உயரமாக இருப்பதால் அங்கிருந்தும் மழைநீர் எங்கள் தெருவுக்குள் வந்து விடுகிறது. எங்கள் தெருவில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால், மழை நீர் வெளியேற வழியில்லை. குளம்போல் தேங்கி நிற்பதால் அதிகளவில் கொசு உற்பத்தியாகி நோய் பரவுவதோடு, துர்நாற்றமும் வீசுகிறது. மேலும், எங்கள் தெருவில் கடந்த 1997-ம்ஆண்டு காவல் நிலையம் வந்த போது சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகுகடந்த 26 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அனைத்து குறுக்கு மற்றும் பிரதான தெருக்களில் எல்லாம் சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால், எங்கள் தெரு மட்டும் சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ, அமைச்சர் உள்ளிட்டோருக்கு கடந்த 27 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பலனில்லை. கடந்த 2017-ம் ஆண்டு அப்போதையதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்சுந்தரவள்ளி வந்து ஆய்வுசெய்து சாலை வசதி அமைத்துத் தரஉத்தரவு பிறப்பித்தார். ஆனால்,அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், 2021-ம்ஆண்டு பேரூராட்சி உதவி இயக்குநர் ஆய்வுசெய்து 3 மாதத்துக்குள் சாலை அமைத்துதருவதாக கூறினார். ஆனால், அதன்பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சொத்துவரி வசூலிப்பதில் மட்டுமே நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துகிறது.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் எங்கள் தெருவில் மழைநீர் வடிகால் வசதிஅமைத்துத் தருவதோடு, சாலையும் செப்பனிட வேண்டும். இதற்கு நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முருகையன் கூறினார். இதுகுறித்து, திருநின்றவூர் நகராட்சித் தலைவர் உஷா ராணியிடம் கேட்ட போது, ‘‘கிருஷ்ணாபுரம் பகுதியில் ஒவ்வொரு சாலையாக சீரமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட 1-வது குறுக்குத் தெரு சாலையும் சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT