Published : 26 Dec 2023 03:04 AM
Last Updated : 26 Dec 2023 03:04 AM

புதுப் பொலிவு பெறும் காஞ்சி ராஜாஜி சந்தை: ஜனவரியில் திறப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நூற்றாண்டுகளை கடந்த ராஜாஜி காய்கறி சந்தையின் சீரமைப்பு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ராஜாஜி காய்கறி சந்தை ஆங்கிலேயர் காலத்தில் 1907-ம் ஆண்டு கட்டத் தொடங்கியது. இருப்பினும் 1933- ம் ஆண்டில்தான் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த சந்தையில் 400-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. இந்த சந்தைக்கு உள்ளுர் விவசாயிகள் மற்றும் கோயம்பேடு, வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் மக்களும் சிறு வியாபாரிகளும் தினமும் இங்கு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

தாம்பரம், திண்டிவனம், திருச்சி, செய்யார், வந்தவாசி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, உத்திரமேரூர் செல்லும் பேருந்துகள் ராஜாஜி சந்தை வழியாக செல்வதால் இந்த காய்கறி சந்தைக்கு பொதுமக்கள் எளிதாக வந்து சென்றனர். ஆனால் இந்த சந்தை மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கியும், சுவர், மேற்கூரைகள் சிதைந்தும் பாழடைந்த கட்டிடமாக இருந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து சந்தையை சீரமைத்து புதிதாக கட்டுவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி மூடப்பட்டது. தற்போது ஓரிக்கை அரசு பேருந்து பனிமனை அருகே தற்காலிகமாக சந்தை செயல்பட்டு வருகிறது.

பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து வசதி இல்லாத பகுதி என்பதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இவ்வழியாக குவாரிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் சாலையும் மிகவும் சேதமடைந்து தூசி நிறைந்த பகுதியாக மாறியதுடன் காய்கறிகளும் சுகாதாரமான முறையில் கிடைக்கவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காய்கறி வியாபாரி ரவி கூறியதாவது: தற்காலிக சந்தை அமைத்து ஒர் ஆண்டுக்கும் மேலாகிறது. எங்களுக்கும் இங்கு வந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. புதிய ராஜாஜி சந்தையை விரைவாக திறந்தால் நன்றாக இருக்கும். மழைக்காலங்களில் எங்களால் சமாளிக்க முடியவில்லை வியாபாரம் தடைபடுகிறது. சேற்றில் நடந்து வந்து தான் இங்கு வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ராஜாஜி சந்தையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் நிர்வாக அறை, தாய்ப்பால் வழங்கும் அறை, உணவகம், ஏடிஎம், கழிப்பிடம், குடிநீர் வசதி, போலீஸ் புத், சிசிடிவி கேமரா, சேமிப்பு கிடங்கு, தங்கும் அறை, இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன நிறுத்தம், மழைநீர் சேகரிப்பு ஆகிய கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு 189 கடைகள் ஆஸ்பெட்டாஸ் ஷீட்டிலும், 60 கடைகள் சென்ட்ரிங் கடைகளாகவும் கட்டப்பட்டுள்ளன. புது வசதிகளுடன் கூடிய ராஜாஜி சந்தையின் கட்டுமானப் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும். அடுத்த மாதம் சந்தை திறக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x