Published : 26 Dec 2023 02:13 PM
Last Updated : 26 Dec 2023 02:13 PM
புதுச்சேரி: முடங்கிக் கிடக்கும் புதுச்சேரியை மீட்டெடுங்கள் பிறகு தமிழக அரசியலை விமர்சிக்கலாம் என்று ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "புதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை தான் இன்னும் தமிழக பாஜக தலைவர் என்ற நினைப்பிலேயே தினமும் அரசியல் விமர்சனம் செய்து வருகிறார். அதில் பழைய படி தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற துருபிடித்த வார்த்தை மட்டும் தான் இல்லை.
மற்றபடி அவர் பாஜக தலைவராக இருந்தபொழுது என்னவெல்லாம் அரசியல் பேசினாரோ அதே பேச்சை தான் ஆளுநராக இருக்கும் இன்றும் பேசி வருகிறார். ஆளுநர் என்ற பதவியின் கவுரவத்தையும், தகுதியையும் குழிதோண்டி புதைத்து வருகிறார். இன்று தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கன மழையும், வெள்ளமும் எவரும் எதிர்பார்க்காத ஒரு பேரிடர் ஆகும். அதில் மூக்கை நுழைத்த தமிழிசை திராவிட மாடல் அரசு திண்டாடுவதாகவும், தென் மாவட்டங்களை திமுக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகவும், வெள்ளத்தைக் கையாள்வதில் அரசு தோல்வி கண்டதாகவும் நாகூசாமல் கூறியது எவ்வளவு பெரிய மோசடித் தனம்.
சென்னை வெள்ளத்தை சமாளித்து திறம் பட மக்களை மீட்டெடுத்த தமிழக அரசுக்கு மத்திய குழுவே பாராட்டியது என்பது தமிழிசையின் பார்வைக்கு தெரியவில்லை போலும். ஒரே நாளில் 95 செ.மீ மழையை பெற்ற தென் மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு சகஜ நிலைக்கு கொண்டு வந்ததை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏன் ஆளுநருக்கு மட்டும் அது தெரியவில்லை. இந்த பேரிடருக்கு வேண்டிய நிதியளிக்க கோரிக்கை வைத்தபோது மத்திய பாஜக அரசு பம்முகிறது. அது பற்றி அவர் ஏன் வாய்திறக்கக் கூடாது.
ஏது பணம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆனவமான பேச்சு தமிழகமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அவருக்கு சற்றும் நான் சளைத்தவர் அல்ல என்பதைக் காட்டிக் கொள்ளத்தான் தமிழிசை முயல்கிறாரா?. மக்களால் தேர்வு பெற தகுதியற்ற இந்த இருவருக்கும் தமிழக அரசியல் மீது எவ்வளவு ஆசை பாருங்கள். புதுச்சேரி நகர் பகுதி நிலத்தடியில் கடல் நீர் உட்புகுந்து உப்பு தன்மை கலந்து விட்டதும், இன்னும் சிறிது காலத்தில் கிராமப் பகுதியிலும் நிலத்தடி நீர் உப்பு கலந்துவிடும் நிலையால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்காக ஏதேனும் நீங்கள் கவலைப்பட்டீர்களா?.
புதுச்சேரியில் உள்ள 85 ஏரிகளின் நிலை குறித்தோ, 8 படுகை அணைகளின் பராமரிப்பு குறித்தோ, 400 குளங்கள் பறிபோனது பற்றியோ உங்களுக்கு ஏதாவது அக்கறை உண்டா?. போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் அல்லல்படுவதை தீர்க்கவோ, நெரிசலை தவிர்க்க ரூ.30 கோடியில் பாதியில் நிற்கும் உப்பனாறு மேம்பாலத்தை முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டீரா?. ஆயிரக் கணக்கான இளைஞர்கள் படித்து வேலைக்காக அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகும் அவலத்தை போக்குவதற்கான முயற்சி உண்டா?. 100 நாள் வேலை 20 நாள் வேலையாக சுருங்கிக் கிடக்கிறதே அதை மீட்டெடுக்கும் வழிவகை உண்டா?.
கடல் அரிப்பில் இருந்து மீனவ மக்களை காப்பாற்ற விரிவான திட்டம் உண்டா?. புதுச்சேரி – தின்டிவனம், புதுச்சேரி – சென்னை, புதுச்சேரி – காரைக்கால் ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை உண்டா?. இப்படி எண்ணற்ற சவால்கள் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் நிலையில் இதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் தமிழக அரசியலில் தலையை நுழைப்பது ஏன்? முதலில் ஆளுநர் என்ற கடமையை ஆற்ற முயலுங்கள். பிறகு அரசியலுக்கு வரலாம். உங்கள் ஆளுநர் பதவியை துறந்துவிட்டு அரசியல் அரங்குக்கு வந்தால் நாங்களும் அதனை வரவேற்கத் தயாராக இருக்கிறோம். வரும் தேர்தலிலாவது நீங்கள் டெபாசிட் வாங்குவதை உறுதிச் செய்யப் பாருங்கள்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT