Published : 26 Dec 2023 12:33 PM
Last Updated : 26 Dec 2023 12:33 PM
சென்னை: ஓராண்டாகியும் வேங்கைவயல் கொடூரத்துக்குக் காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. வேங்கைவயல் கொடூரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வு நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டது. குற்றவியல் விசாரணையில் ஓராண்டு என்பது மிக நீண்ட காலம். ஆனால், இவ்வளவு காலம் கடந்தும் கூட வேங்கைவயல் கொடூரத்திற்கு காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. இந்த சிக்கலில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
வேங்கைவயல் கொடூரத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையும், நிலைப்பாடும் ஆகும். பாதிக்கப்பட்ட தங்கள் மீதே ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது தான் தங்களை நிம்மதியாக வாழ வைக்கும் என்று பட்டியலின மக்கள் கூறுகின்றனர். வேங்கைவயல் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வாழும் பிற சமூகத்தினரும் தங்கள் மீது தேவையின்றி பரப்பப்படும் அவதூறுகளை நிறுத்த உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இவ்வளவுக்குப் பிறகும் குற்றவாளிகளை கைது செய்வதில் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் என்ன தயக்கம்? என்று தெரியவில்லை.
வேங்கைவயல் கொடுமை குறித்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையிடமிருந்து சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட பிறகும் கூட, விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. வேங்கைவயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்வதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதிலும் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையோ? என்ற ஐயத்ததை தான் இந்த நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன.
வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாததன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதே போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அது குறித்த செய்திகள் வெளியில் வந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சி, அந்த நிகழ்வுகள் மூடி மறைக்கப்படுகின்றன அல்லது வேறு காரணங்களைக் கூறி திசை திருப்பப்படுகின்றன. இதே நிலை தொடரக்கூடாது. அதை உறுதி செய்வதற்காக வேங்கைவயல் கொடூரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT