Last Updated : 26 Dec, 2023 08:49 AM

3  

Published : 26 Dec 2023 08:49 AM
Last Updated : 26 Dec 2023 08:49 AM

வேங்கைவயல் சம்பவம் | இன்றுடன் ஓராண்டு நிறைவு: விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கடந்த ஆண்டு டிச.26-ம் தேதி தெரியவந்தது. இந்தக் கொடுஞ்செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் சாட்சிகள் யாரும் இல்லாததால், குற்றவாளி களை கண்டறிய முடியவில்லை. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கைசிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதுவரை 221 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், 31 பேர்டிஎன்ஏ பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டனர். அதில் இருந்து, 10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், யாரும் கைது செய்யப்படாததால், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடிபோலீஸார் கூறும்போது, “குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நேரடி சாட்சியாரும் இல்லாததால் அறிவியல்பூர்வமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படும் நபர்களை அடுத்தடுத்த கட்ட உயர் தொழில்நுட்ப விசாரணைக்கு உட்படுத்தி விசாரித்து வருகிறோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றனர். சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளான இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது அனைத்துத் தரப்பினரையும் கவலையடையச் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x