Published : 26 Dec 2023 05:03 AM
Last Updated : 26 Dec 2023 05:03 AM
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை ஜனவரி 2-வது வாரம் முதல் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, வரும் 2024 பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில், மிக்ஜாம் புயலால் கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு, 25 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்து, அவர்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் வரலாறுகாணாத அளவில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்ட பகுதிகளில் குடும்பங்களுக்கு ரூ.6,000, மற்ற பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு ரூ.1,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், 2024 ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பேரிடர் பகுதிகளில் நிவாரணம் வழங்குவதை காரணமாக வைத்து, மாநிலத்தின் மற்ற பகுதி மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால், பொங்கல் பரிசாக கடந்த ஆண்டு போலவே, ரூ.1,000 ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி ஒரு முழு கரும்பு ஆகியவற்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்திலோ, ஜனவரி முதல் வாரத்திலோ இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜனவரி 2-வது வாரத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
கடந்த முறை, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு தொடங்கப்பட்ட மகளிர் உரிமை தொகை திட்டத்தில், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர், கார் வைத்திருப்போர் எனபல்வேறு வரையறையின்கீழ் தகுதியான பயனாளிகளுக்கே மட்டுமே மாதம் ரூ.1,000வழங்கப்படுகிறது.
தற்போது, வெள்ள நிவாரணம் வழங்கும் நடைமுறையிலும், அரசு அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் தங்கள் பாதிப்பைகுறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்திலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...