Published : 02 Jan 2018 08:18 AM
Last Updated : 02 Jan 2018 08:18 AM
சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டப் பணிகள் குறித்து ஆழ்வார்பேட்டையில் லஸ் சர்ச் சாலை, சி.வி.ராமன் சாலைகளையொட்டியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எந்த அறிவிப்பும் இன்றி திடீரென ஆய்வு மேற்கொள்ளப்பட்டதால், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
சென்னையில் முதல் கட்டமாக 45 கி.மீ. தூரம் நடந்துவரும் மெட்ரோ ரயில் பணிகள் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். குறிப்பாக, அண்ணாசாலை யில் டிஎம்எஸ் – சின்னமலை வரையில் வரும் 2018 மார்ச் மாதத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்க, இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
ரூ.85,047 கோடி திட்ட அறிக்கை
இதற்கிடையே, சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இரண்டாவது கட்டமாக மாதவரம் - மயிலாப்பூர் – சிறுசேரி, மாதவரம் – கோயம்பேடு - பெரும்பாக்கம் – சோழிங்கநல்லூர் மற்றும் நெற்குன்றம் – கோயம்பேடு - வி.இல்லம் ஆகிய 3 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் மொத்தம் 105 கி.மீ. தொலைவுக்கு ரூ.85,047 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பியுள்ளது.
மக்கள் தொகை, வழித் தடங்கள் விவரம், ரயில் நிலையங்கள், எங்கெல்லாம் சுரங்கங்கள், உயர்மட்டப் பாதைகள் அமைப்பது தொடர்பான வரை படங்கள் போன்றவை இந்த திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, இரண்டா வது கட்ட திட்டத்துக்கான உத்தேச வழித்தடப் பகுதிகளில், மெட்ரோ ரயில் அதிகாரிகள் வழிகாட்டுதலில் தனியார் நிறுவன அலுவலர்கள் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னறிவிப்பின்றி ஆய்வு
ஆழ்வார்பேட்டை சி.வி.ராமன் சாலை, லஸ் சர்ச் சாலைகளையொட்டியுள்ள கடைகள், குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எந்த முன் அறிவிப்பும் இன்றி ஆய்வு நடத்தியதால், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக அப்பகுதி யைச் சேர்ந்த மக்கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குழுவினர் வந்து இங்கு ஆய்வு நடத்தினார்கள். எங்களுக்கு என்னவென்றே புரியாமல் குழப்பத்தில் இருந்தோம். இதற்கிடையே, தற்போது, கடந்த சில நாட்களாக சி.வி.ராமன், லஸ் சர்ச் சாலை பகுதிகளில் அதிகாரிகள் சிலர் வந்து சாலையின் அளவு, குடியிருப்பு, வணிக வளாகங்களில் மீண்டும் ஆய்வு நடத்துகின்றனர்.
எதற்காக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது என்று கேட்டபோது, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நடப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எந்தத் திட்டத்துக்காக ஆய்வு செய்வதாக இருந்தாலும், முறையாக அறிவிப்பு வெளியிட்டு, இங்குள்ள குடியிருப்பு பகுதி மக்களிடம் கலந்தாய்வு செய்து, பணிகள் மேற்கொள்ளும்போது மக்களிடம் ஏற்படும் வீண் குழப்பத்தை தவிர்க்கலாம்’’ என்றனர்.
மண் பரிசோதனை
மண் பரிசோதனை தொடர் பாக மெட்ரோ ரயில்வே அதிகாரி கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னை போன்ற பெரிய நகரங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பயணிகள் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும் மெட்ரோ ரயில் சேவை மிகவும் அவசிய மாக உள்ளது. 2-வது கட்ட திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல், வரும் 2018 மார்ச் மாதத்துக்குள் கிடைக்கும் என எதிர்பார்க் கிறோம்.
தற்போது, இதற்காக ஆழ்வார்பேட்டை உட்பட சில இடங்களில் வழக்கமான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மண் பரிசோதனைக்காக புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தவுள்ளோம். முதல்கட்ட பணியின்போது, 50 மீட்டர் இடைவெளியில் நடத்தப்படும் மண் பரிசோதனை இனி இரண்டாவது கட்ட பணியின் போது 25 மீட்டர் இடைவெளியில் சோதனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT