Published : 26 Dec 2023 08:04 AM
Last Updated : 26 Dec 2023 08:04 AM
சென்னை: ஒடிசா முன்னாள் ஆளுநரும், தமிழக முன்னாள் தலைமைச் செயலருமான மறைந்த எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஒடிசா மாநில முன்னாள் ஆளுநரும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி உள்ளிட்டவர்களுடன் பணியாற்றியவரும், தமிழக முன்னாள் தலைமைச் செயலருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருந்தினேன்.
கடந்த, 1957-ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தனது பணியைத் தொடங்கி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ஆட்சியராகவும், மத்திய அரசின் செயலராகவும், தமிழகத்தின் தலைமைச் செயலராகவும் பணியாற்றி இந்திய ஆட்சிப் பணியில் தனக் கென ஒரு முத்திரையைப் பதித்து, ஓய்வுக்குப் பிறகும் ஒடிசா மாநில ஆளுநராக செவ்வனே மக்கள் பணியாற்றியவர்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்குதமிழக அரசின் சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார். ராஜேந்திரனின் சேவைகளைப் போற்றும் வகையில், காவல்துறை மரியாதை யுடன் இறுதி நிகழ்வு நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மறைந்த எம்.எம்.ராஜேந்திரன் உடல் இன்று காலை 9 முதல் 11 மணிவரை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூ சர்ச்சில் வைக்கப்படும். அதன்பிறகு, கீழ்ப்பாக்கம் கல்லறையில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT