Published : 26 Dec 2023 08:08 AM
Last Updated : 26 Dec 2023 08:08 AM
சென்னை: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் மிகப் பிரபலமான ரயிலாக வந்தே பாரத் ரயில் இருக்கிறது. நவீன வசதிகளுடன் அதிவேகத்தில் இயங்கும் இந்த ரயில் சென்னை ஐசிஎஃப் ஆலையில் முதன்முறையாக 2018-ம் ஆண்டில்தயாரிக்கப்பட்டது. இதுவரை 49 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், 40-க்கு மேற்பட்டவை நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.
இவற்றில், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் இருந்து கோயம்புத்தூர், மைசூரு, விஜயவாடா மற்றும் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, சிறப்பு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே சிறப்புவந்தே பாரத் ரயிலை இயக்கரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரிலிருந்து வியாழக்கிழமைகளில் அதிகாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு, நாகர்கோவிலை அதேநாள் மதியம் 2.10 மணிக்கு அடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு அதே நாள் இரவு 11.45 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலில் 7 சேர்கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியும் இணைக்கப்படவுள்ளன. இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலை வாராந்திர சிறப்புரயிலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சென்னை எழும்பூர் -திருநெல்வேலி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் நீடிப்பாக இயக்குவதா தனிச் சிறப்பு ரயிலாக இயக்குவதா என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பிலிருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு ரயில்வேக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்: இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.
இவற்றில், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர், சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, சிறப்பு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், தெற்கு ரயில்வேக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை ரயில்வே வாரியம் அண்மையில் ஒதுக்கீடு செய்தது. இந்த வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளை கொண்டது. இந்த ரயில் கோயம்புத்தூர் - மங்களூர் இடையே இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT