Published : 22 Aug 2014 12:00 AM
Last Updated : 22 Aug 2014 12:00 AM
காங்கிரஸில் நிலவும் கோஷ்டி மோதல் காரணமாக சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் மற்றும் தீரர் சத்தியமூர்த்தியின் சிலைகளை திறந்து வைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸுக்கும், தலைவர்கள் சிலைக்கும் ராசியில்லையோ என்ற கவலை அக்கட்சித் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு சென்னை ஸ்பென்ஸர் பிளாசா சந்திப்பில் சிலை வைக்க 1989-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுமதி பெறப்பட்டது. வாழப்பாடி ராமமூர்த்தியின் ஆதரவாளரான வழக்கறிஞர் ஏசையா இதற்கான முயற்சிகளை செய்தார். ஆனால், ஜி.கே.மூப்பனார் மற்றும் வாழப்பாடி ராமமூர்த்தி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறு பாடுகளால் இந்த சிலையை அமைப்பது தள்ளிப்போனது.
பின்னர், தமிழக காங்கிரஸ் தலைவராக எம்.கிருஷ்ணசாமி இருந்தபோது, இதற்கான முயற்சிகள் மீண்டும் மேற் கொள்ளப்பட்டன. அப்போது சிலை அமைப்பதற்கான அனுமதியை திமுக ஆட்சியாளர்கள் வழங்காததால் அது மீண்டும் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸின் மூத்த நிர்வாகியும், தற்போதைய பொதுச் செயலாளருமான டி.செல்வம் கூறும்போது, “இந்திரா காந்திக்கு சிலை வைக்க, கடந்த திமுக ஆட்சியின் போது, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிலைக்கு அனுமதி வாங்கியிருந்த ஏசையாவின் குடும்பத்தினரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். ஆனால், அப்போது அரசின் சார்பில் தெளிவான ஒப்புதல் கிடைக்கவில்லை”என்றார்.
இந்நிலையில், சத்தியமூர்த்தி பவனில் சுமார் 10 லட்ச ரூபாய் செலவில் காமராஜருக்கு ஒன்பது அடி உயரத்திலும், தீரர் சத்தியமூர்த்திக்கு மார்பளவிலும் வெண்கல சிலைகள் அமைக்கும் பணி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
சுமார் 6.5 லட்ச ரூபாய் செலவில் சிலைகள் தயாராகிவிட்ட நிலையில், பீடம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு, திறப்பு விழா தேதி தொடர்ந்து தள்ளிப்போகிறது. சிலை திறப்பு காலதாமதம் ஆவதால் அதை திறப்பதற்குள் மாநிலத் தலைவர் மாற்றப்படலாம் என்று காங்கிரஸ் கட்சியில் ஒரு கோஷ்டியினர் எதிர்பார்க்கின்றனர்.
இந்த கோஷ்டி மோதலால் காங்கிரஸ் தலைவர்களுக்கும் சிலைக்கும் ராசியில்லையோ என்ற கவலை காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிலை திறப்பதற்கு கால தாமதம் ஏற்படுவது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் கேட்டபோது, “சிலைகள் தயாராகி விட்டன.
கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்படும் வலுவான பீடம் மற்றும் அழகிய வேலைப்பாடு கொண்ட பூங்காவை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் இந்த சிலைகளை திறக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இந்திரா காந்திக்கு சிலை வைப்பதற்கான பணிகளையும் தொடர்வோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT