Last Updated : 25 Dec, 2023 04:59 PM

 

Published : 25 Dec 2023 04:59 PM
Last Updated : 25 Dec 2023 04:59 PM

சேலம் கோரிமேடு ஏடிசி நகரில் சேதமடைந்த தரைப்பாலத்தை அச்சத்துடன் பயன்படுத்தும் மக்கள்

மழைக்காலத்தில் ஓடை நீரில் மூழ்கிய தரைப்பாலம் (கோப்புப்படம்)

சேலம்: சேலம் கோரிமேடு ஏடிசி நகரை, அழகாபுரத்துடன் இணைக்கும் சாலையில், ஓடையின் குறுக்கே உள்ள தரைப்பாலம் பழுதடைந்த நிலையில் இருப்பதுடன், மழைக்காலத்தில் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படுவதும் என பல ஆண்டுகளாக பிரச்சினை நீடிப்பதால், இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சேலத்தில் மக்கள் தொகை நெருக்கம் அதிகமான பகுதிகளில் ஒன்றாக உள்ளது கோரிமேடு. இங்கு மகளிர் அரசு கலைக்கல்லூரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன.

இதனால், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தினமும் கோரிமேடு பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோரிமேடு பகுதியுடன் இணைந்த ஏடிசி நகர், கோரிமேடு- அழகாபுரம் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில், கோரிமேடு- அழகாபுரம் சாலையின் குறுக்கே செல்லும் ஓடை மீது, ஏடிசி நகரில் பல ஆண்டு களுக்கு முன்னர் கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் சேதமடைந்துள்ள நிலையில், மழைக்காலத்தில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் மூழ்கிவிடுவதும் அடிக்கடி நிகழ்கிறது. விரைவில், பாலம் முழுவதுமாக சேதமடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்படும் ஆபத்து நிலவுகிறது.

சேலம் கோரிமேடு ஏடிசி நகரில், ஓடையின் குறுக்கே உள்ள பழுதடைந்த நிலையில்
உள்ள தரைப்பாலம். அதில் தடுப்புச் சுவரும் இல்லாத நிலையில், மக்கள்
தினமும் அச்சத்துடன் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
| படம்: எஸ்.குரு பிரசாத் |

எனவே, இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறியது: ஏடிசி நகரில், கோரிமேடு- அழகாபுரத்தை இணைக்கும் முக்கிய சாலையில் அமைந்துள்ள பாலத்தின் வழியாக, அழகாபுரம், எம்டிஎஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானவர்கள், கோரிமேடு வந்து செல்கின்றனர். கோரிமேடு சுற்று வட்டாரப் பகுதி மக்களும், அழகாபுரம், 5 ரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு, ஏடிசி நகர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏடிசி நகர் தரைப்பாலம் பழமை காரணமாக பழுதடைந்துள்ள நிலையில், அதன் மீது அதிக எடை கொண்ட வாகனங்கள் சென்றதால், பாலத்தின் மையத்தின் கீழே விரிசல் ஏற்பட்டு, பாலம் நாளுக்கு நாள் சேதமடைந்து வருகிறது.

தரைப்பாலத்தின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் இல்லாத நிலையில், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்ல வேண்டிய அவலமும் உள்ளது. மழைக்காலத்தில் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, தரைப்பாலம் மழை நீரில் மூழ்கிவிடுகிறது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்படும்போது, மக்கள் அஸ்தம்பட்டி வழியாக, நீண்ட தூரம் சுற்றிக் கொண்டு அழகாபுரம் செல்ல வேண்டியதாகிறது. மருத்துவ தேவைக்காக செல்லும்போது, மிகவும் தாமதம் ஏற்படுகிறது. சேலம் மாநகரின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் ஏடிசி நகர் தரைப்பாலத்தின் போக்குவரத்து முக்கியத்துவம் கருதியும், மக்களின் நலன் கருதியும், ஏடிசி நகர் ஓடையில் உள்ள தரைப்பாலத்தை அகற்றி, அந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x