Published : 25 Dec 2023 04:43 PM
Last Updated : 25 Dec 2023 04:43 PM
கோவை: இயற்கை நமக்கு அளித்த மிகப்பெரிய கொடை மழை. சராசரியாக பெய்யும் மழையில்40 சதவீதம் நிலத்தின் மீது ஓடி கடலில்கலப்பதாகவும், 35 சதவீதம் வெயிலில் ஆவியாவதாகவும், 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்துக்கு உதவுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் தென்மேற்கு (ஜூன் -செப்டம்பர்) மற்றும் வடகிழக்கு (அக்டோபர் - டிசம்பர்) ஆகிய பருவமழைக் காலங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்கிறது. நடப்பு மாத தொடக்கத்தில் சென்னையில் மிக்ஜாம் புயலால், கனமழை பெய்து, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. சென்னை மட்டுமின்றி அதையொட்டிய திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களும் கடுமையாகபாதிக்கப்பட்டன. அதேபோல், சில நாட்களுக்கு முன்னர் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதுபோன்ற கனமழை அரசு நிர்வாகத்துக்கு விடப்படும் ஒரு முன்னெச்சரிக்கையாகும்.
ஓடைகள், நீர்நிலைகளுக்கு செல்லும் வாய்க்கால்கள் ஆகியவற்றை முறையாக பராமரித்து கழிவுகளை அகற்றி, தூர்வாரி மழை நீர் தடையின்றி செல்ல ஏதுவாக வைத்திருக்க வேண்டும் என்பதை மேற்குறிப்பிட்ட பேரிடர்கள் உணர்த்துகின்றன. கோவை மாநகரில் 6,500-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் சாலைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் சாக்கடைக் கால்வாய்கள் செல்கின்றன. சிங்காநல்லூர், வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம், செல்வாம்பதி, குறிச்சிக்குளம் உள்ளிட்ட 9 குளங்கள் மாநகராட்சி எல்லைக்குள் உள்ளன. சங்கனூர் ஓடை, சிற்றோடைகள், ராஜவாய்க்கால், நொய்யல் வழித்தட வாய்க்கால் மற்றும் சிறு சிறு வாய்க்கால்கள் என ஏராளமான நீர்நிலை வழித்தடங்கள் மாநகரில் செல்கின்றன.
மாநகரில் ஒருங்கிணைக்கப்பட்ட 60 வார்டுகளில் மூன்று கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் 3-ம் கட்டப்பணி தற்போதும் நடந்து வருகிறது. அதேபோல், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தகட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி தொடங்க உள்ளது. அதேபோல் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் சாலைகளை தோண்டி குழாய் பதிப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை மாநகரில் கனமழை பெய்தால் அவை வழிந்தோடுவதற்கு ஏற்ப நீர் வழித்தடங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் மாநகராட்சிக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர் ஆவாரம்பாளையம் ராஜ்குமார் கூறியதாவது: மாநகரில் பலவித காரணங்களுக்காக சாலைகள் தோண்டப்படுகின்றன. கழிவுநீர் செல்வதற்காக பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்பு அமைக்கப்பட்ட பாதாள சாக்கடைக்குழாய்களும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. மாநகரில் துடியலூர்,உருமாண்டம் பாளையம், சரவணம்பட்டி,பீளமேடு, சின்னவேடம்பட்டி, குறிச்சி, குனியமுத்தூர், சிங்காநல்லூர், போத்தனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாக்கடைகள் முறையான பராமரிப்பு இல்லாமல், மண் கழிவு தேங்கிய நிலையில் உள்ளன. ஓடைகள், வாய்க்கால்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பலவகை கழிவுகள் அடைத்துள்ளன.
சாதாரண மழைக்கே கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள சுரங்கப் பாதைகள், சாலையோரங்களில் மழைநீர் தேங்கி விடுகிறது. இச்சூழலில் மிக கனமழை பெய்தால் கோவை தாங்குமா என்பது சந்தேகம்தான்.சென்னை, தென்மாவட்டங்களில் பெய்ததுபோல் அதிக கனமழை பெய்தால் கோவை மாநகரில் மழைநீர் தடையின்றி குளங்களில் சென்று கலக்குமா? என்ற கேள்வி எழுகிறது. அதற்கேற்ப நீர் வழித்தடங்களை தூர்வாரி சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வானிலையியல் துறை முன்னாள் பேராசிரியர் டி.என்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய பிரச்சினைகள் எழும் அபாயம் உள்ளது. நம் நாட்டின் ஒருநாள் சராசரி மழையளவு 20 மி.மீ தான். ஆனால், காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீ (950 மி.மீ) அளவுக்கு மழை பெய்துள்ளது. இது தமிழகத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையளவு ஆகும். கோவையில் வடகிழக்கு பருவமழைக்காலத்தில் அதிக மழை இருக்கும். கோவையில் 80 மி.மீ, 90 மி.மீ அளவுக்கு மழை பெய்த காலங்கள் உண்டு. அதேபோல், கோவையில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. 10 செ.மீ கூட மழை வர வாய்ப்புள்ளது. அதற்கேற்ப நீர்வழித்தடங்களை சீரமைக்காவிட்டால் வெள்ள பாதிப்பு ஏற்படும், என்றார்.
கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொதுவாக மழைக்காலம் தொடங்கும் சமயத்தில் மாநகரில் உள்ள நீர்நிலை கட்டமைப்புகள், வாய்க்கால் வழித்தடங்கள், சாலையோர சாக்கடைகள் தூர்வாரி சீரமைக்கப்படும். அதன்படி, நடப்பாண்டும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், மழைநீர் வடிகால்கள் கட்டும் பணிகளும், பாதாள சாக்கடைக் குழாய்கள் பதிக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT