Last Updated : 25 Dec, 2023 01:48 PM

1  

Published : 25 Dec 2023 01:48 PM
Last Updated : 25 Dec 2023 01:48 PM

எல்இடி திரை விளம்பரங்களால் ரயில் தகவல்களை அறிவதில் சிரமம்: தடங்கலால் வருந்தும் சென்ட்ரல் பயணிகள்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட எல்இடி திரைகளில், பெரும்பாலும் விளம்பரங்கள் திரையிடப்படு வதால், ரயில்களின் கால அட்டவணையை பார்ப்பதில் சிரமமாக உள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னைக்கு தினசரி லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும் பாலானோர் பயணத்துக்காக ரயில் சேவையையே தேர்வு செய்கின்றனர். அந்தவகையில் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் இவர்களை வரவேற்கும் முக்கிய மையமாக உள்ளது.

இதனால் சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கும், அங்கிருந்து சென்னைக்கும் வந்து செல்வோர் பெரும்பாலும் சென்ட்ரல் ரயில் நிலையத்தை தான் பயன்படுத்துகின்றனர். இதையொட்டி எப்போதும் பரபரப்பாகவே காட்சியளித்து கொண்டிருக்கிறது எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம். ரயில் நிலையத்தில் பயணிகளின் வழிகாட்டுதல்களுக்காக ஆங்காங்கே பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு, ரயில் சேவைகளின் கால அட்டவணையானது ஓடிக்கொண்டிருப்பது வழக்கம். இந்தஅட்டவணையில் ரயில்களின் பெயர், ஊர்களின் பெயர், வண்டி எண், வந்து சேரும் நடைமேடை எண் உள்ளிட்டவை இடம்பெற் றிருக்கும். அதேபோல சிறிய வகை டிவிகளின் மூலமாகவும் இந்த வழிகாட்டுதல்கள் ஒளிபரப்படும்.

இவற்றை வைத்து பயணிகள் ரயில்கள் ரயில் நிலையத்துக்குள் வருவதையும், எந்த நடைமேடையில் நிற்கிறது என்பதையும் அறிந்து கொள்வர். அந்தவகையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெளிப்புரத்தில், பார்க்கிங் பகுதி அருகே 2 எல்இடி திரைகளும், மெயின் நுழைவு வாயில் உள்ளே பயணிகள் அமரும் இருக்கை பகுதி, நடைமேடைகள் 10-க்கு நுழையும் வாயில் பகுதி, நடைமேடை 5-6 களுக்கு இடையே, நடைமேடை 3-4 களுக்கு இடையே தலா ஒன்று என மொத்தம் 6 எல்இடி திரைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. அதேபோல பல்வேறு இடங்களில் சிறியவகை டிவிகளின் வாயிலாக தகவல்கள் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த எல்இடி திரைகளில் பெரும்பாலான நேரங்களில் ரயில் சேவை விவரங்களை கொண்ட கால அட்டவணையை விட, விளம்பரங்கள் அதிகமாக இடம்பெறுவதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக சில நேரங்களில் ரயில்கள் கிளம்புவதற்கு முன்பு அவசரமாக ரயில்களை பிடிக்க வரும் பயணிகள், நடைமேடைகளை கண்டறிய திரைகளில் ரயில் எண்களை தேடும்போது, இடையிடையே விளம்பரங்கள் வந்து தொல்லை தருவதாக தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த பயணி ப்ரீத்தி: விளம்பரங்களை முதலில் நிறுத்த வேண்டும். ரயில் கிளம்பும் 5 நிமடத்துக்கு முன்பு கூட திரைகளில் இரண்டு, மூன்று விளம்பரங்களை பார்த்தபிறகு தான் ரயில் விவரங்களை காண முடிகிறது. இதனால் சரியான நேரத்துக்கு நடைமேடைகளுக்கு செல்ல முடிவதில்லை. விளம்பரத்தால் ரயில்வே துறைக்கு வருமான கிடைப்பது சரிதான் என்றாலும் அதற்குகேற்ப விளம்பரங்களை அளவாக, பயணிகளை பாதிக்காதவாறு இடம்பெற செய்தல் வேண்டும். அல்லது விளம்பரங்களை குறைவாக திரையிட வேண்டும்.

கொரட்டூர் ஜி.குமார்: எல்இடி திரைகளில் ரயில் சேவைகளின் விவரங்களை மறைத்து விளம்பரங்களை திரையிடுவதற்கு பதிலாக, ஒரே எல்இடி திரையை இரண்டாக பிரித்து (ஸ்ப்லிட் ஸ்க்ரீன் முறை) ஒருபுறம் விளம்பரமும், மறுபுறம் ரயில் சேவைகளின் விளம்பரங்களையும் இடம்பெற செய்யலாம். இதன்மூலம் பயணிகளுக்கு தொந்தரவு எதுவும் ஏற்படாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இவ்விவகாரம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது: ரயில் நிலையங்களில் உள்ள எல்இடி திரைகளில் விளம்பரம் செய்வது ஒப்பந்தராரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் திரைகளில் 50-50 சதவீதம் ரயில் சேவைகளின் விவரங்களும், விளம்பரங்களும் பகுதிக்கு பகுதியாக பயணிகள் பாதிக்கப்படாத வகையில் இடம்பெற செய்தல் அவசியமாகும். இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் ஒப்பந்ததார்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.

சில திரைகள் ஸ்ப்லிட் ஸ்க்ரீன்களாக பிரிக்கப்பட்டு ஒருபுறம் விளம்பரமும், ஒருபுறம் ரயில் விவரங்களும் இடம்பெற்று செயல்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் அனைத்து எல்இடி திரைகளை இவ்வாறு பிரிக்க முடியாது. ஏனெனில் திரைகள் சிறியதாக இருப்பதால் அவற்றை பிரித்தால், விவரங்களும் சிறியதாகிவிடும். பின்னர் பயணிகளுக்கு பயன்படாது. எனினும் இதுகுறித்து திட்டமிடப்படும். அதேபோல எல்இடி திரைகளில் விளம்பரங்கள் அதிகமாக இடம்பெறுவது தொடர்பாகவும் ஒப்பந்தரார்களுக்கு அறிவுறுத்தப்படும்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x