Published : 25 Dec 2023 04:42 AM
Last Updated : 25 Dec 2023 04:42 AM
சென்னை: பிரதமர் மோடி உத்தரவின்பேரில், நாளை தூத்துக்குடிக்கு வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
வங்கக்கடலில் மிக்ஜாம் புயல்காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 7-ம் தேதி வந்து, வெள்ள சேதத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று தெரிவித்தார். அப்போது, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததுடன், பிரதமருக்கு கடிதமும் எழுதினார்.
இதையடுத்து, மத்திய குழுவினர் வந்து 3 நாட்கள் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர்,முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நிரந்தரமாக தீர்வு காண வேண்டிய பணிகளுக்கு ரூ.12,659 கோடியும் வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படுவதாக முதல்வர் கடந்த 9-ம் தேதி அறிவித்து, நிவாரணம் வழங்கும் பணியை 17-ம்தேதி தொடங்கி வைத்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதால், 5.50 லட்சம் பேர்விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், குமரிக்கடலில் உருவான காற்று கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டியது. 30 மணி நேரத்துக்கு மேல் மழை இடைவிடாமல் பெய்ததால், பல பகுதிகள் வெள்ளக்காடாகின. தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில், இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க கடந்த 19-ம் தேதி டெல்லி சென்றமுதல்வர் ஸ்டாலின், அன்று இரவு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண தொகை மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு உடனடி நிவாரணமாக ரூ.2 ஆயிரம்கோடியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அடுத்த நாளே மத்திய குழுவினர் வந்து தென் மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு சென்றனர். பின்னர், தூத்துக்குடி சென்று வெள்ள பாதிப்புகளை முதல்வர் பார்வையிட்டார்.
இதற்கிடையே, தமிழகத்தில் வெள்ள பாதிப்புகள், மீட்பு,நிவாரணப் பணிகள் குறித்தும்,வானிலை ஆய்வு மையம் விடுத்தஎச்சரிக்கை அறிவிப்புகள் தொடர்பாகவும் மாறி மாறி விமர்சனங்கள் எழுந்தன. சென்னையில் வெள்ளத் தடுப்பு நிதி ரூ.4,000 கோடியில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பினார். தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்பின்போது, டெல்லியில் இண்டியா கூட்டணி கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றது பற்றியும் விமர்சித்தார்.
இந்த சூழலில், பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலினுடன் பேசினார். அப்போது, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடி வருகிறார். மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை மதியம்12.30 மணிக்கு அவர் ஆய்வு நடத்துகிறார். மதியம் 2 மணிக்கு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, குறைகளை கேட்கிறார்.
உரிய உதவி வழங்குவதாக முதல்வரிடம் பிரதமர் உறுதி: எக்ஸ் வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தற்போது என்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, மிக்ஜாம் புயலுக்கு பிறகு, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளம் தொடர்பாக கேட்டறிந்தார். மாநில அரசு பெரிய அளவில் மேற்கொண்டு வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து அவரிடம் விளக்கினேன். மேலும், தற்போதைய இக்கட்டான சூழலை தெரிவித்து, மத்திய அரசு உடனே நிதியுதவியை வழங்குமாறு கோரிக்கை வைத்தேன். இரு பேரிடர்களின் பாதிப்பில் இருந்து மீண்டு வர மத்திய அரசு தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் உறுதி அளித்தார். மேலும், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்புவதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT