Published : 16 Jan 2018 12:38 PM
Last Updated : 16 Jan 2018 12:38 PM

ஜல்லிக்கட்டை நேரடியாக பார்க்க முடியவில்லையே..! - பாலமேட்டில் பார்வையாளர்கள் ஏமாற்றம்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் பலர் நேரில் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அடுத்து பாலமேடு ஜல்லிக்கட்டு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெறும்.

நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டில் எதிர்பார்க்கப்பட்ட சில காளைகள் களம் இறங்கவில்லை. அந்த காளைகள் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. ஆனாலும் மதுரை மட்டுமில்லாது திருச்சி, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த சிறந்த காளைகள் பங்கேற்றதால், பாலமேடு ஜல்லிக்கட்டு காலை முதல் மாலை வரை விறுவிறுப்பு குறையாமல் நடைபெற்றது.

பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள். ஆனால், மாணவர்களின் போராட்டம் இதுவரை ஜல்லிக்கட்டை பார்க்காதவர்களைக் கூட இந்த ஆண்டு பார்க்க தூண்டியுள்ளது. அதனால் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் அணி அணியாக கார்கள், இருசக்கர வாகனங்களில் பாலமேட்டில் திரண்டனர்.

கேலரி டிக்கெட்டுகள் விற்பனை

மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்பேரில் அரசு போக்குவரத்துக் கழகம், பெரியார் பஸ்நிலையம், மாட்டுத்தாவணியில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கின. இதனால் நேற்று பாலமேட்டில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். ஆனால், வெறும் 5 ஆயிரம் பார்வையாளர்கள் பார்க்கும் அளவுக்கே காலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனால், வீட்டின் மாடிகள், கட்டிடங்களின் மீது ஏறி பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை பார்த்தனர். கேலரிகளில் குறைந்தபட்சம் ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரைக்கும் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

வெளிநாட்டினர் திண்டாட்டம்

அதிகாலை 7 மணிக்குள் சென்றவர்கள் மட்டுமே, டிக்கெட்டுகளை பெற்று ஜல்லிக்கட்டை பார்த்தனர். அதன்பிறகு வந்தவர்கள் கேலரியில் டிக்கெட் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு கேலரியில் இடமில்லை. இதனால் தொலைவில் நின்று ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தையும், வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் எல்லைக்கோட்டை நோக்கி ஓடி வருவதையும் மட்டுமே காண முடிந்தது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை நேரடியாகப் பார்க்க முடியாத பார்வையாளர்களுக்காக, வாடிவாசல் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை ஆங்காங்கே ‘மெகா சைஸ்’ எல்இடி டிவிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஒளிபரப்பப்பட்டது. ஆனால், பகல் நேரம் என்பதால் ஜல்லிக்கட்டு காட்சிகள் தெளிவாகத் தெரியவில்லை.

இதனால் வெளிநாட்டினர் ஏராளமானோர் கேலரியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அவர்கள் பாலமேடு வந்ததன் நினைவாக அதன் பின்னணியில் ‘செல்பி’ மட்டும் எடுத்துச் சென்றனர். அவர்களுடன் உள்ளூர் ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் ஆர்வமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஜல்லிக்கட்டுப்போட்டியில் ராணுவ வீரர்கள், போலீஸார் பலர் கலந்து கொள்வர். கடந்த காலங்களில் போலீஸார் பலர், காளைகளை அடக்கி பரிசுகளை பெற்றதும் உண்டு. அதுபோல நேற்று மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த ராணுவவீரர்கள், போலீஸார் பலர் கலந்துகொண்டனர்.

சுகாதார நிலையத்தில் புகுந்த காளைகள்

பார்வையாளர்கள் தங்களது வாகனங்களை ஊரின் எல்லையில் நிறுத்துவதற்கு பெரிய அளவில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரே நபர் காளையை அடக்கினால் மட்டுமே, அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. இருவர் சேர்ந்து பிடித்தால் அந்த காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாடுகளை சேகரிக்கும் கடைசி பகுதியில் பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

வாடிவாசலில் இருந்து துள்ளிக் குதித்து ஓடி வந்த காளைகளில் சிலவற்றை அதன் உரிமையாளர்கள் பிடிக்காமல் விட்டதால் அவை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவ்வப்போது புகுந்தன. அதனால், அங்கிருந்த மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் சிதறி ஓடினர். காளைகள் முட்டி பலர் காயமடைந்தபோது அவர்களை தயாராக நின்ற 108 ஆம்புலன்ஸில் கொண்டு சென்று சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அங்கிருந்த தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸை அதட்டிய ஏற்பாட்டாளர்கள்

ஜல்லிக்கட்டு விழாவை வர்ணனை செய்த போட்டி ஏற்பாட்டாளர்கள், சில சமயங்களில் அதிகாலை முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை ஒருமையில் பேசி அதட்டியது முகம் சுளிக்க வைத்தது. காளை உரிமையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்ததால் பாலமேட்டில் இருந்த ஹோட்டல்களில் நேற்று வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.

பார்வையாளருக்கு நேர்ந்த பரிதாபம்

பாலமேட்டில் கடந்த காலங்களில் காளைகள், பார்வையாளர்கள் பகுதியில் புகுந்தன. ஆனால், இந்த ஆண்டு இரட்டை தடுப்புவேலி அமைக்கப்பட்டிருந்ததால் காளைகள் புகுவது தடுக்கப்பட்டது. ஆனால், எல்லைக்கோட்டின் கடைசியில் காளைகள் சேகரிக்கப்படும் இடத்தில் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் மாடுகள் முட்டி 18 பேர் வரை படுகாயமடைந்தனர். அதில் காளிமுத்து என்பவர் உயிரிழந்த பரிதாபமும் நிகழ்ந்தது.

அவருக்கு அம்மாவும், தங்கையும் உள்ளனர். அவரது தந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் மில் வேலைக்குச் சென்று காளிமுத்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்கும் ஆர்வத்தில் நண்பர்களுடன் பாலமேட்டுக்கு வந்துள்ளர். வீட்டுக்கு திரும்பும் நேரத்தில் அவரை வாடிவாசலில் இருந்து வந்த காளை வயிற்று பகுதியில் முட்டியது. இதனால் அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x