Published : 24 Dec 2023 05:15 PM
Last Updated : 24 Dec 2023 05:15 PM
புதுடெல்லி: வந்தே பாரத் ரயிலை மொரப்பூரிலும் நிறுத்த மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அவரை டெல்லியில் சந்தித்து திமுக எம்பி செந்தில்குமார் மனு அளித்துள்ளார். இத்துடன் அவர், தருமபுரி-மொரப்பூர்-சென்னை செல்லும் ரயில்வே திட்டத்துக்கு மூக்கனூர் மற்றும் ஏ.ரெட்டிஹல்லி கிராமங்களில் விவசாயிகளின் நிலங்கள் பாதிக்காத வண்ணம் கையகப்படுத்தும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் தருமபுரி நாடாளுமன்ற மக்களவை எம்பியான டாக்டர்.டிஎன்வி.செந்தில் குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: "தருமபுரி-மொரப்பூர்-சென்னை செல்லும் இணைப்பு ரயில் ரயில் திட்டமானது தருமபுரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதை நடைமுறைப்படுத்தும் வகையில் இத்திட்டத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. அதற்கான நிலங்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தருமபுரி-மொரப்பூர் இடையே ரயில் பாதை அமையும் இடத்தில் மூக்கனூர் மற்றும் ஏ.ரெட்டிஹல்லி ஆகிய இரு கிராமங்களில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
விவசாய மக்களின் நூறு ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் மற்றும் வீடுகள் இந்த பாதை அமைக்கும் பகுதியில் உள்ளது. இதனால், இந்த நிலங்களை கையகப்படுத்தும் பொழுது நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே, ரயில் பாதை அமையும் இடத்திலிருந்து சுமார் 600 மீட்டர் அளவுக்கு வேறு பாதையில் இந்த ரயில் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் நல்லது. இதன்மூலம், இந்த இரு கிராம மக்களின் விவசாயிகளின் நிலங்கள் பாதிக்காது. எனவே, இந்த வகையில் மத்திய அரசு தனது ரயில்வே திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பொம்மிடி ரயில் நிலையத்தில் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது. இந்த பட்டியலில், கோவை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி பெங்களூர் எக்ஸ்பிரஸ் முக்கியமாக உள்ளன.
இதேபோல், மொரப்பூரில் சென்னை திருவனந்தபுரம் அதிவேக ரயில், கோயம்புத்தூர் திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நின்று செல்லவும் கோரிக்கை உள்ளது. புதிதாக விடப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மொரப்பூர் ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பலன் மொரப்பூர் மட்டுமின்றி அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள ஊர்களுக்கும் கிடைக்கும்." இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT