Published : 24 Dec 2023 01:34 PM
Last Updated : 24 Dec 2023 01:34 PM

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை: அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 36-வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்ஜிஆரின் சிலைக்கு கட்சியினர் மரியாதை செலுத்தினர். சென்னை மெரினா கடற்கரையில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், மோகன், வளர்மதி, கோகுலஇந்திரா, திண்டுக்கல் சீனிவாசன், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட பலர் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மேலும், எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி, அதிமுக சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் திரளான கட்சித் தொண்டர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதளப்பக்கத்தில், "நம் அதிமுக எனும் வீரிய விருட்சத்தின் விலை மதிக்க முடியாத விதை, தமிழகத்தில் இல்லையென்ற சொல்லை இல்லாமல் ஆக்கிட அயராது பாடுபட்ட பாரத ரத்னா, ஏழை எளிய மக்களின் வலிகள் அறிந்து வளர்ச்சி திட்டங்கள் வகுத்த தன்னலமற்ற தனித்தலைவர்,சத்துணவு தந்திட்ட சரித்திர நாயகர், என்றும் கோடிக்கணக்கான தமிழக மக்கள் நெஞ்சங்களில் வாழும் மன்னாதிமன்னன் MGR, அவர் வகுத்து தந்த பாதையின் வழிநடந்து, அவரின் நினைவு நாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x