Published : 24 Dec 2023 12:29 PM
Last Updated : 24 Dec 2023 12:29 PM
கோவை: அனைத்து மதங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமமாக மதித்து போற்ற வேண்டும் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நடப்பது கிறிஸ்துமஸ் விழா. நடத்துவது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. இது தான் திராவிட மாடல் அரசு. திமுக நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு எல்லா மத நம்பிக்கையாளர்களும் வந்திருக்கிறார்கள்.
இந்த ஒற்றுமை உருவாவதைச் சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை, அரசியல் லாபங்களுக்காக மதத்தை பயன்படுத்துபவர்களால் மத ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் இந்த ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தப் பாடுபடும் திமுகவை வகுப்புவாத சக்திகளுக்குப் பிடிக்கவில்லை என்று முழங்கியிருக்கிறார்.
திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரால், கிறிஸ்துமஸ் விழாவை நடத்த முடியும். முஸ்லீம்களின் ரம்ஜான் விழாவை நடத்த முடியும். சனாதனம் தர்மம், அதாவது, இந்து மத ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள முடியும். ஆனால், இந்துக்களின் பண்டிகைகள் எதற்கும் வாழ்த்துச் சொல்ல முடியாது. இது தான் உண்மையான திராவிட மாடல்.இதை முதல்வர் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், மனதிற்குள் சொல்லியிருப்பார்.
முதல்வர் ஸ்டாலின்,கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. முதல்வராக அவர் தனது கடமையை செய்திருக்கிறார். ஆனால், கடந்த மாதம் தான் தமிழகத்தில் உள்ள 90 சதவீத இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள்.
அனைவருக்கும் பொதுவான முதல்வராக அதற்கு ஒரு வார்த்தை கூட, வாழ்த்துச் சொல்லவில்லை. தீபாவளி மட்டுமல்ல, தைப் பூசம், விநாயகர் சதுர்த்தி என இந்துக்களின் பண்டிகைகள் எதற்கும் அவர் வாழ்த்துச் சொல்வதில்லை. எனவே, மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை விட்டுவிட்டு, அனைத்து மதங்களையும் முதல்வர் சமமாக மதித்துப் போற்ற வேண்டும். அப்போதுதான் அமைதியும் நல்லிணக்கமும் உருவாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT