Published : 24 Dec 2023 11:56 AM
Last Updated : 24 Dec 2023 11:56 AM

வெள்ளம் வடிந்தாலும் வேதனையில் தூத்துக்குடி மக்கள்: நெஞ்சை அதிரச் செய்யும் கிராமப்புற பாதிப்புகள்

ஏரல் பகுதி. | படம்: மு.லெட்சுமி அருண்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆனால், வாழ்வையே புரட்டிபோட்ட பெருமழை பாதிப்புகளில் இருந்து மக்களால் மட்டும் மீள முடியவில்லை. தூத்துக்குடி கிராமங்களின் தற்போதைய நிலையைக் காட்டும் காட்சிகள் இங்கே > உருக்குலைந்த தூத்துக்குடி, நெல்லை கிராமங்கள் - கள நிலவர புகைப்படத் தொகுப்பு

பெரு மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. ராணுவம், விமானப் படை, கடலோர காவல் படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை, காவல் துறையில் பயிற்சி பெற்ற மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.

வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டாலும் தாமிரபரணி கரையோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நெஞ்சை அதிரச் செய்கின்றன. பெரும்பாலான கிராமங்களுக்கு செல்லும் சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. தாமிரபரணி பாசன பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல்,வாழை பயிர்கள் சேதமடைந்துவிட்டன.

தூத்துக்குடி மாநகரில் முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், குறிஞ்சிநகர், கதிர்வேல் நகர், ஆரோக்கியபுரம், மாதாநகர் பகுதிகளில் இன்னும் முழங்கால் அளவுக்குமேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த பகுதிகளில் மின்சார விநியோகமும் இன்னும் சீராகவில்லை. ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள், உறைகிணறுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கப்படுகிறது. தொலை தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் நடமாடும் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தொலை தொடர்பு சேவை வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன பழுது நீக்கும் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. தூத்துக்குடி மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வந்து, தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பழுதடைந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகளை இரவு, பகலாக மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர். இந்த பணிகளை தமிழக மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆய்வு செய்தார். தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது. மற்ற பகுதிகளிலும் சாலைசீரமைப்பு தொடங்கியுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து சாலை பணியாளர்கள் வந்துள்ளனர்.

எம்.பி. அமைச்சர்கள்: தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளை அமைச்சர்கள் கீதா ஜீவன், ராஜ கண்ணப்பன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். கனிமொழி எம்.பி., அமைச்சர் எ.வ.வேலு, ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நிவாரண பணிகளை முடுக்கி விட்டனர். தூத்துக்குடி கிராமங்களின் தற்போதைய நிலையைக் காட்டும் காட்சிகள் இங்கே > உருக்குலைந்த தூத்துக்குடி, நெல்லை கிராமங்கள் - கள நிலவர புகைப்படத் தொகுப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x