Published : 24 Dec 2023 04:10 AM
Last Updated : 24 Dec 2023 04:10 AM

சென்னை நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீர் - வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகேயுள்ள சுரங்கப் பாதையில் நீரூற்று ஏற்பட்டு தேங்கும் தண்ணீ்ர மற்றும் ஆங்காங்கே காணப்படும் குழிகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதை விரைவாக சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"மிக்ஜாம்" புயல் தாக்கத்தால் பெய்த கனமழையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக் காடாக மாறியது. இந்த மழையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நுங்கம் பாக்கமும் ஒன்றாகும். நுங்கம்பாக்கம் பிரதான சாலை, நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதிகள், அகஸ்திஸ்வரர் கோயில் மாடவீதி பகுதி உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறி, பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். தற்போது,பல்வேறு இடங்களில் மழை நீர் வடிந்துவிட்டது.

அதே நேரம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப் பாதையில் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்குவதால், மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி சாலை - நெல்சன் மாணிக்கம் சாலை இடையே இணைப்பை ஏற்படுத்தும் பாதையாக இந்த சுரங்கப் பாதை இருக்கிறது. இது, நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக தினசரி பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

காலை, மாலை வேளைகளில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ( பீக் அவர்ஸில் ) இந்த சுரங்கப் பாதையில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் இருக்கும். அதனால், இந்த சுரங்கப் பாதை எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், இந்த சுரங்கப் பாதையில் கடந்த ஒரு வாரமாக நீர் ஊற்று ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி வருகிறது. மேலும், சுரங்கப் பாதை சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், நெல்சன் மாணிக்கம் சாலை - நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி இடையே இருமார்க்கமாக இந்த சுரங்கப் பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

சில நேரங்களில் இங்குள்ள பள்ளத்தில் வாகனத்தை இயக்கி, சிலர் கீழே விழுந்து காயமடைந்தும் வருகின்றனர். இந்த சாலையில் காணப்படும் குழிகளில் செங்கற்களை போட்டு வைத்து உள்ளனர். இருப்பினும், தேங்கும் நீர் மற்றும் மேடு பள்ளத்தால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. சுரங்கப்பாதை நோக்கி நீர் ஊற்று வந்து கொண்டே இருப்பதால், தண்ணீர் தேங்கி வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையும் இருக்கிறது.

இது குறித்து சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பாலா என்பவர் கூறும்போது,"மிக்ஜாம் புயல் மற்றும் தொடர் மழை விட்டு 10 நாட்களை கடந்து விட்டது. இன்னும் நுங்கம்பாக்கம் அருகே சுரங்கப் பாதையில் நீரூற்று மூலமாக தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை. ஆனால், பல இடங்களில் இருந்து சுரங்கப்பாதை நோக்கி தண்ணீர் வருகிறது.

இந்த சுரங்கப் பாதை வழியாக சாலையில் செல்லும் போது, மிகவும் கவனமாக செல்ல வேண்டியுள்ளது. ஏனெனில், சாலையில் பல இடங்கள் குண்டும் குழியுமாக இருக்கின்றன. மழை நீர் தேங்குவதால், எந்த இடத்தில் மேடு பள்ளம் இருக்கிறது என்பதை அறிவது சிரமம். எனவே, உடனடியாக இந்த சுரங்கப் பாதை சாலையை சீரமைக்க வேண்டும். மேலும், தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கடந்த வாரம் பெய்த கனமழையால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருக்கிறது. இதனால், பூமியில் இருந்து 15 அடி கீழ் உள்ள சுரங்கப்பாதை சுவரில் நீரூற்று ஏற்பட்டு வருகிறது. இந்த நீர் ஊற்று படிப்படியாக குறைந்துவிடும். இதுதவிர, சுரங்கப்பாதை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x