Published : 24 Dec 2023 04:10 AM
Last Updated : 24 Dec 2023 04:10 AM
கூடலூர்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 141 அடியை எட்டியதைத் தொடர்ந்து, இடுக்கி மாவட்டத்துக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் உயரம் 152 அடியாக இருந்தாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடியே உச்ச அளவாகக் கொண்டு நீர்த் தேக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் போதிய மழை இல்லாததால், அணையின் நீர்மட்டம் 135 அடியாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த தொடர் மழையினால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
அதைத் தொடர்ந்து, கடந்த 21-ம் தேதி 140 அடியை எட்டியதால், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் அணைக்கு நீர்வரத்து சீராக இருந்தது. அதே நேரம் குறைந்தபட்ச அளவே நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால், நேற்று இரவு 7 மணிக்கு 141 அடியை எட்டியது.
இதைத் தொடர்ந்து, இடுக்கி மாவட்டத்துக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. தற்போது, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,714 கன அடியும், வெளியேற்றம் 300 கன அடியாகவும் உள்ளது. 142 அடிக்கு நீர்மட்டம் உயர ஒரு அடியே உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணையிலிருந்து அதிகபட்ச நீரை கேரளாவின் இடுக்கி மாவட்டம் வழியேதான் வெளியேற்ற முடியும். எனவே, எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து சப்பாத்து, வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இடுக்கி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், 142 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததும் உபரி நீர் கேரளப் பகுதி வழியே திறக்கப்படும். எனவே, இடுக்கி மாவட்டத்துக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT