Published : 23 Dec 2023 07:14 PM
Last Updated : 23 Dec 2023 07:14 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அருகே மலைக்குன்றுகளுக்கு நடுவே ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுவதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் வழியாக வாராந்திர ரயில் உட்பட 70-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். திண்டுக்கல் அருகே கொடைரோடு அடுத்துள்ள அம்பாத்துரை அருகே மலைக்குன்றுக்கு நடுவே ரயில் பாதை அமைந்துள்ளது. அவ்வப்போது, பாறைகள் உருண்டு ரயில் தண்டவாளத்தில் விழும். அதனை, ரயில்வே ஊழியர்கள் அகற்றுவது வழக்கம். அதன்படி, அம்பாத்துரை அருகே ரயில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்து கிடந்தால் அவ்வழியாக ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்படும். மேலும் இரவு நேரங்களில் தண்டவாளத்தில் பாறைகள் கிடப்பது தெரியாமல் ரயில்களை இயக்கும் போது விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இதை தடுக்கும் வகையில், மலைக்குன்றுக்கு நடுவே தண்டவாளம் இருக்கும் பகுதி மற்றும் மலைக்குன்றுக்கு வெளிப்பகுதி என 24 மணி நேரமும் ரயில்வே ஊழியர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக, அவர்களுக்கு பிரத்யேக அறை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் பாறைகள் விழுந்து கிடந்தால் உடனே அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து ரயில்களை நிறுத்துவதும், பாறைகளை அகற்றுவதற்கான செயல்களில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளை இந்த ஊழியர்கள் ஈடுபடுவர். இரவு நேரங்களில் வெளிச்சத்துக்குக்காக சோலார் வசதியும் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment