Published : 23 Dec 2023 07:45 AM
Last Updated : 23 Dec 2023 07:45 AM
சென்னை: பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இந்தியா வந்தபிறகு, ‘மெட்ராஸ் பிரெசிடென்சி‘ உருவாக்கப்பட்டது. இதற்கென மெட்ராஸ் பிரெசிடென்சி ராணுவமும் உருவாக்கப்பட்டது. இதன் ஒரு பிரிவாக 'மெட்ராஸ் இன்ஜினீயர் குரூப்' என்ற, ராணுவத்துக்கு உதவி புரியும் ராணுவ பொறியாளர் படைப் பிரிவு 1780-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இப்படை பிரிவின் பிரதான பணி, பாலங்கள், சாலைகள் அமைப்பது, சாலைகளில் உள்ள தடைகளை நீக்குவது, சுரங்கங்களில் போக்குவரத்து தடைகளை நீக்குவது மூலம் படைகள் முன்னேறிச் செல்ல உதவுவது போன்றவையாகும். சுதந்திரத்துக்கு முன்பு வரை இந்த படைப் பிரிவில் பெரும்பாலானோர் தமிழர்களே இருந்தனர். இந்த படைப் பிரிவின் பாடலே, 'வெற்றி, வெற்றி, எதிலும் வெற்றி தம்பி' என்றுதான் தொடங்குகிறது.
நாடு முழுவதும் இந்தி திணிப்பு இருந்து வந்தபோதிலும், இந்த ராணுவ படைப்பிரிவின் பிரத்யேகப் பாடல் இன்றும் தமிழில்தான் உள்ளது. இப்படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் 'மெட்ராஸ் சாப்பர் (Madras Sapper)' என ராணுவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டனர். ஆனால் களத்தில் ஆங்கிலேய ராணுவத்தினரால் ‘தம்பி' என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.
இப்படைப் பிரிவினர் (தமிழர்கள்) முதல் உலகப் போர், 2-ம் உலகப் போரின்போது, தெற்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் ஏராளமான நாடுகளுக்கு பிரிட்டிஷ் ராணுவத்துக்காக போர் புரிய அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அப்போது டைகிரிஸ் ஆற்றைக் கடந்து இன்றைய ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு செல்ல பாலம் அமைத்து பேருதவி செய்தது மெட்ராஸ் சாப்பர்ஸ்தான்.
அந்த போரின்போது உடல் நலக்குறைவால் ஏராளமான தமிழர்கள் இறந்துள்ளனர். அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னம் இன்றும், மெட்ராஸ் இன்ஜினீயர் குரூப் தலைமையிடமான பெங்களூரு, அல்சூருவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது, ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிக்க, அந்த மலைப் பகுதிகளில் சாலை அமைக்கவும், பாலங்கள் அமைக்கவும் முக்கியப் பங்காற்றியது மெட்ராஸ் சாப்பர்ஸ்தான். அதன்பிறகு கார்கில் போரிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தியுள்ளது.
தற்போது தமிழகத்தில் 4 தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான அமைவிடங்களில் ஏராளமான கிராமங்களை தொடர்புகொள்ள முடியாத நிலை இருப்ப தாகக் கூறப்படுகிறது. ஆங்காங்கே காட்டாற்று வெள்ளத்தால் ஏராளமான சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் தற்போது விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புபடை, ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரிலிருந்து சுமார் 150 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சாலை துண்டிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக பாலங்கள் அமைத்து, போக்குவரத்தை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.
அதனால் இந்த இக்கட்டான சூழலில் நிவாரணப் பணியில் இந்திய ராணுவத்தின் 'மெட்ராஸ் இன்ஜினீயர் குரூப்' படைப்பிரிவின் மெட்ராஸ் சாப்பர்ஸ்களை ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் பாலங்கள் அமைப்பது, சாலைஅமைப்பது, மோட்டார் படகுகளை இயக்குவது, அதை பழுதுபார்ப்பது, பிறருக்கு உணவு சமைத்து கொடுப்பது, பாதிக்கப்பட்டவர்களை மீட்பது போன்றவற்றில் சிறப்பு திறன் பெற்றவர்களாக உள்ளனர்.
இவர்களின் சிறப்பு அணி தேவையான உபகரணங்களுடன் செகந்திராபாத்தில் தயாராகவே உள்ளது. அந்த படைப் பிரிவை உடனடியாக தென் மாவட்டங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT