Published : 23 Dec 2023 05:19 AM
Last Updated : 23 Dec 2023 05:19 AM
சென்னை: தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளின் விசாரணை, ஜன.2 முதல் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் நடைபெறவுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள சில நீதிபதிகள், 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் விசாரிக்கும் வழக்குகளின் துறைகள் மாற்றப்பட்டு, சென்னையில் இருப்பவர்கள் மதுரைக்கும், மதுரையில் இருப்பவர்கள் சென்னைக்கும் இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, ஜன.2-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரியும் நீதிபதிகளின் துறைகளை மாற்றம் செய்தும், இடமாறுதல் செய்தும் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உத்தரவிட்டுள்ளார்.
ஜனவரி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும்நீதிபதியாக என்.ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே தமிழக அமைச்சர் கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோரை சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது தொடர்பான உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருந்தார்.
அதன்பிறகு ஆனந்த் வெங்கடேஷ் மதுரைக்கு சென்றதால், இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக நடந்து வந்தது. இதனிடையே, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2017-ம் ஆண்டு தொடர்ந்திருந்த மற்றொரு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அந்த வழக்கில் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.
இந்தச் சூழலில் மற்ற அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்குகளில் கீழமை நீதிமன்றம் அவர்களை விடுவித்து பிறப்பித்த தீர்ப்புகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மீண்டும் இந்த வழக்குகளை விசாரிக்கும் வகையில், அந்த துறை மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் சில இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வாய்ப்பு இருப்பதாக நீதித்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோல, மற்ற நீதிபதிகளின் துறைகளும் மாற்றப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT