Published : 23 Dec 2023 05:05 AM
Last Updated : 23 Dec 2023 05:05 AM

நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு: முழு வீச்சில் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள்

தூத்துக்குடி/ திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் 42 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 13 பேரும் என மொத்தம் 55 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதிகனமழையும், அதைத்தொடர்ந்து தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளமும் மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. தற்போது மழை வெள்ளம் வடிய, வடிய பாதிப்புகளின் உக்கிரம் வெளியே தெரியத் தொடங்கியிருக்கிறது. வாழ்நாளில் சிறுகச்சிறுக சேமித்து வாங்கிய ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்களை வெள்ளம் விழுங்கிக் கொண்டது.

நோய் பரவும் அபாயம்: பல இடங்களில் ஆடு, மாடுகள்,கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளன. இறந்த கால்நடைகள் தண்ணீரில் ஆங்காங்கே மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நெல், வாழை உள்ளிட்ட பயிர்ச்சேதமும் மிகவும் அதிகம். இதனிடையே வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த தந்தை, மகள் வெள்ளத்தில் சிக்கி இறந்திருப்பது நேற்று தெரியவந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்துக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இவர்களின் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதில் 17 உடல்கள் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுபோல், வெள்ளத்தில் சிக்கி திருநெல்வேலியில் மட்டும் 7 பேரும், பாளையங்கோட்டையில் 3 பேரும், மானூரில் 2 பேரும்,சேரன்மகாதேவியில் ஒருவருமாக மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 8 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள். இவ்விருமாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 55 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரம்: அதேநேரம் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் வடியத் தொடங்கி ஆங்காங்கே சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. எனவே, உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, மீட்பு, நிவாரண நடவடிக்கைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x