Published : 23 Dec 2023 07:05 AM
Last Updated : 23 Dec 2023 07:05 AM

வெள்ள சேதத்தால் தவிக்கும் மக்கள்; அரசு, தொழில் துறைக்கு பல்லாயிரம் கோடி இழப்பு: நிவாரண உதவிகள் விரைவில் வழங்கப்படுமா?

திருநெல்வேலியில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

தூத்துக்குடி/ திருநெல்வேலி: பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு, தொழில் துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், தூத்துக்குடி மாநகரம், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், ஏரல், அகரம், காயல்பட்டினம் போன்ற பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளனர். மேலும், ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ள சேதங்களை மத்தியக் குழுவினர் ஏற்கனவே பார்வையிட்டுச் சென்றுள்ளனர். சேதங்கள் குறித்து இன்னும் முழுமையாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இவ்விரு மாவட்டங்களிலும் பல்லாயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி - பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் அருகேயுள்ள பாலம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ஏரல் மற்றும் ஆத்தூரில் உள்ள ஆற்றுப்பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இவற்றைச் சீரமைக்கவே பல கோடி செலவாகும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சலையில் ஏரல் அருகே
சேதமடைந்த தாமிரபரணி உயர்மட்ட பாலம்.
| படம்: என்.ராஜேஷ் |

சாலை, பாலங்கள் சேதம்: இதேபோல, தூத்துக்குடி- எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி மாநகரில் உள்ள பெரும்பாலான சாலைகள், பல்வேறு கிராம சாலைகள் சேதமடைந்துள்ளன. கிராமங்கள் உள்ள சிறு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், கூட்டுக் குடிநீர் திட்டக் கிணறுகள் ஒட்டுமொத்தமாக அடித்துச் செல்லப்பட்டதால், குடிநீர் விநியோகம் முடங்கியுள்ளது. ஏராளமான மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவை பெருத்த சேதமடைந்துள்ளன. தொழில் நகரமான தூத்துக்குடியில் சிப்காட் வளாகம், கோரம்பள்ளம் தொழிற்பேட்டையில் மழைநீர் இன்னும் வடியவில்லை. தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த பொருட்கள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் என பல்லாயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இரு மாவட்டங்களிலும் பிசானபருவ நெல் சாகுபடி தொடங்கியிருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக நெற்பயிர் நீரில் மூழ்கி விட்டது. நெல் வயல்கள், வாழைத் தோட்டங்கள் மண் மேடாகக் காட்சியளிக்கின்றன. பொதுமக்கள் வீடுகளையும், சொத்துகளையும் இழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ளஅரசுப் போக்குவரத்துக் கழகபணிமனையில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனைக்குள் 10 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால், ரூ.10 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும்” என்றார். அப்போது, அரசுப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் மகேந்திரகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

நிவாரணம் எப்போது? - அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் மழை வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. எனவே, வெள்ளச் சேத கணக்கெடுப்புப் பணிகளை அரசு விரைவாக முடித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x