Published : 22 Dec 2023 10:54 PM
Last Updated : 22 Dec 2023 10:54 PM
சென்னை: “சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டும்” என தன்னை விமர்சித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் தந்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது..
“யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல, சிலரிடம் கலைஞரைப் போல, சிலரிடம் கழகத் தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.
வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், “நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ” என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்” என்று கூறினேன். என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.
மீண்டும் சொல்கிறேன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம்.
நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே” என தனது எக்ஸ் தளத்தில் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ளிக்கிழமை டெல்லியில் தமிழக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணியில் மத்திய அரசின் பங்கு குறித்து பேசி இருந்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மீது விமர்சனம் வைத்தார். அதோடு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் தனது கருத்தை தெரிவித்தார். “அரசியல் பயணத்தில் வளர்ந்து வரும் அமைச்சர் உதயநிதி கவனமாக பேச வேண்டும்” என அவர் சொல்லி இருந்தார்.
யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.
சிலரிடம் அண்ணாவைப் போல - சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம்.…— Udhay (@Udhaystalin) December 22, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT