Published : 22 Dec 2023 03:58 PM
Last Updated : 22 Dec 2023 03:58 PM
தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக 2030-ம் ஆண்டுக்குள் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது தமிழக அரசு. இந்த இலக்கை அடையும் வகையில், வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் தலைநகர் சென்னையில் 2-வது விமான நிலையம் அவசியம் என கூறப்படுகிறது. அதன்படி, சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் சுற்றிலும் உள்ள 5746.18 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்படுகிறது. வரும் 2028-ம் ஆண்டில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து இறங்கியுள்ளன.
இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூரைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள், தங்களின் குடியிருப்புகள், விளைநிலம் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதை காரணம் காட்டி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் தற்போது 500 நாட்களை கடந்து நடைபெறுகிறது. இதற்கிடையில், அமைச்சர்கள் நேரடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும், நேரடியாக சென்று சமாதானப்படுத்தியும் பொதுமக்கள் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுதவிர, ஏற்கெனவே 6 முறை கிராமசபை கூட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பரந்தூர் திட்டத்தை எதிர்த்து தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.
இந்த சூழலில், தமிழக அரசின் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திர நாதன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது மச்சேந்திரநாதன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5746.18 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதியளித்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த அக்டோபர் இறுதியில் வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்த திட்டத்துக்காக 5746.18 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்குதனியார் பட்டா நிலம் 3774.01 ஏக்கர் மற்றும்அரசு நிலம் 1972.17 ஏக்கர் கையகப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல் படி, ரூ.1822.45 கோடி இழப்பீடு (நிர்வாக செலவுடன் சேர்த்து) கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், நிலம் எடுப்புக்காக சிறப்புமாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு துணை ஆட்சியர்கள், சிறப்பு தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் உட்பட 326 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அலுவலகம் தற்போது தயாராகி வருகிறது. எதிர்ப்பு தொடரும் காரணத்தால் இதுவரை மாவட்ட வருவாய் அலுவலர்கள் உள்ளிட்டோர் தங்கள் பணியை தொடங்கவில்லை.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷிடம் கேட்டபோது, “பரந்தூர்விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை பதவியேற்கவில்லை. தற்போது அலுவலகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.வட்டாட்சியர்கள் அடுத்து நியமிக்கப்படுவர்.அதன் பின்னரே நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவர்” என்றார். பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நிகழ்வில், பரந்தூர் அருகே உள்ள ஏகனாபுரம் ஊராட்சி முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளது. இவை இல்லாமல் நாகப்பட்டு, மேலேரி, நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களும் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளன.
கையகப்படுத்த உள்ள அரசுக்கு சொந்தமான 1972 ஏக்கர் நிலத்தில் ஏரிகள், குளங்கள் என மொத்தம் 30-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவற்றை கையகப்படுத்துவதன் மூலம் விசாயத்தை நம்பியுள்ள இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் அழியும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முதலில் 4,000 ஏக்கர் என்று கூறி வந்தததாகவும், தற்போது 5,746 ஏக்கருக்கு அரசாரணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும் எனவும் அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் மெத்தனமே காரணம்! - இதுகுறித்து பரந்தூர் விமான நிலையஎதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோ கூறும்போது, "கடந்த திமுக ஆட்சியில் பன்னூர் பகுதிதான் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது பரந்தூர் பகுதியில் செயல்படுத்த அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு நிலத்தின் வழிகாட்டி மதிப்புகுறைவாக உள்ளது. இதன்மூலம் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். 3 மடங்கு பணம் கொடுப்பதாக கூறுகின்றனர். ஏன் எங்களுக்கு 3 மடங்கு பணம் கொடுக்கிறீர்கள், 3 மடங்கு, ஏரி பாசனத்துடன் கூடிய நிலம் கொடுங்களேன் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வோம். மாவட்ட ஆட்சியர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏற்கெனவே இருந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி எளிதில்மக்கள் அணுகும் நிலையில் இருந்தார். தற்போதுள்ள மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அப்படியில்லை.
எங்கள் பகுதியில் நீர்நிலைகளில் விமான நிலையம் அமைவது பல்வேறு அதிகாரிகளின் மெத்தனமே காரணம்.நீர்நிலைகளில் விமான நிலையம் வருவதற்கு காரணமான அதிகாரிகள் மீது நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி படகில்தான் சென்று பார்த்தார். இங்கு விமான நிலையம் வந்தால் 10 அல்லது 20 ஆண்டுகளில் வீட்டுக்கு ஒரு படகு கொடுக்கும் நிலைதான் வரும். இங்கு விமான நிலையம் வந்தால் மாவட்ட ஆட்சியருக்கு கரும்புள்ளி ஏற்படும். எனவே, மாவட்ட ஆட்சியர், விமான நிலைய திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை அரசுக்கு எடுத்துக் கூறி, அந்த திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சம் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் செயலர் ஜி.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘அக்டோபர் 26-ம் தேதி மச்சேந்திரநாதன் குழுவினரை சந்தித்து இங்கு விமான நிலையம் அமைவதால் என்ன பாதிப்பு என்ற எங்கள் கருத்தைஎடுத்துக் கூறினோம். ஆனால் அந்த மாதம்31-ம் தேதியே அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துவிட்டுசம்பிரதாயத்துக்கு எங்களிடம் கருத்துக்கேட்டதாகவே எங்களுக்கு தோன்றுகிறது. அவசர தேவை என்ற பெயரில் 2,000 ஏக்கருக்கு அதிகமான நஞ்சை நிலங்கள் வகைமாற்றம் செய்யப்படுகின்றன. இதுதொடர்பாக மாவட்ட வருவாய்அதிகாரியிடம் கேட்டோம். எங்கள் கருத்துக்குஎந்த அதிகாரியும் செவி சாய்க்கவில்லை. நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். விவாயிகளுக்கு நிலம கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம் ’’ என்றார்.
சூழலியல் தாக்கம்: தமிழகத்தில் முந்தைய காலங்களில் புயல் வந்தால் கனமழைஇருக்கும். சேதங்களும் இருக்கும்.ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வெறும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வானிலைவரலாற்றில் முதன்முறையாக வட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக தாம்பரத்தில் 49 செமீ மழை பதிவானது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாயின. 23 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் மூழ்கின. தற்போது வானிலை வரலாற்றில் மீண்டும்அதிசயம் நிகழ்ந்துள்ளது. வெறும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவே திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 39 இடங்களில் அதிகனமழையும், 33 இடங்களில் மிககனமழையும், 12 இடங்களில் கனமழையும்பதிவாகியுள்ளன.
இரு நாட்களில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 116 செமீ, திருச்செந்தூரில் 92 செமீ, வைகுண்டத்தில் 62 செமீ, திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 61 செமீ, மாஞ்சோலையில் 55 செமீ என பட்டியல் நீள்கிறது. ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் பரவலாக அதிகனமழை பெய்ததில்லை என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரனே வியந்தார். இப்படி கனவிலும் ஊகிக்க முடியாத பல வானிலை அதிசயங்கள் அண்மைக் காலமாக நிகழ்ந்து வருகின்றன. மிக்ஜாம் புயல் கரையை கடக்காமலேயே அதிகனமழையை கொட்டி தீர்த்து, மீண்டும் சென்னை மாநகரை வெள்ளத்தில் தத்தளிக்க வைத்த நிகழ்வும் இந்த ஆண்டு நிகழ்ந்துள்ளது.
ஏற்கெனவே வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளை அழித்ததாலும், சென்னை மாநகரில் உள்ளஏராளமான ஏரிகளை அழித்து பல்வேறு குடியிருப்பு மற்றும் அரசுதிட்டங்களை செயல்படுத்தியதாலும் அதன் பாதிப்புகளை இன்றும் கண் முன்னே நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த சூழலில் இயற்கையை அழித்து, பரந்தூரில் விமான நிலையமா என்பது அப்பகுதிவாழ் மக்களின் கேள்வியாக உள்ளது.
இதுதொடர்பாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டியக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்பு விவசாயிகள் நலச் சங்கத்தை சேர்ந்த பாலாஜி கூறியதாவது: பரந்தூர் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் 13 ஊராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடு,மாடுகள் வளர்க்கப்படுகின்றன. 13 பெரிய நீர்நிலைகளும், 20-க்கும் மேற்பட்ட குளங்களும், நீர்வழித் தடங்களும் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. இன்று நாங்கள் இயற்கையான, மாசற்ற காற்றை சுவாசித்துக் கொண்டு, நோய்நொடி இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மாசற்ற காற்று, சென்னையிலோ, பிற இடங்களிலோ கிடைக்காது.
நீர்நிலைகள், அவற்றில் நீர் அருந்தும் கால்நடைகள், கால்நடைகள் போடும் சாணம் எருவாவது,அவற்றில் உருவாகும் புழுக்கள், நீர்நிலைகளில்வளரும் மீன்கள், வேளாண் பயிர்கள் பறவைகளுக்கு இறையாவது, பறவைகளின் எச்சங்களால் மர விதைகள் விதைக்கப்படுவது,அந்த மரங்களால் நீர் தாங்கி, மழைநீர் வழிந்தோடுவது மட்டுப்படுத்தப்படுவது, அந்த மரங்கள் கால்நடைகளுக்கு தீவனமாவது, அவற்றைசார்ந்து மனிதன் வாழ்வது என இது ஒரு உணவு மற்றும் வாழ்க்கைச் சங்கிலி. இதில்ஒன்றை அறுத்தாலும் ஒட்டுமொத்த இனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சென்னை, தூத்துக்குடிபோல இங்கு அதிகனமழை பெய்யாது என அரசால் உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் அது அரசின் கையில் இல்லை.
அவ்வளவு நீரும் சென்னையை நோக்கி சென்று, வெள்ள பாதிப்பை மேலும் அதிகமாக்கும். அதனால் இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட்டு, விமான நிலைய திட்டத்தை கைவிடுவது சாலச்சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார். சூழலைக் காப்பது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது, நீர்நிலைகளை பாதுகாப்பதுதான் இன்றைய நிலையில் தலையாய கடமை என்பதை காலநிலை மாற்றம், அவ்வப்போது நமக்கு படிப்பினையை கற்றுக் கொடுத்து வருகிறது. இந்த யதார்த்த நிலையை புரிந்து கொண்டு, அரசு பரந்தூரில் அமைக்கத் திட்டமிட்டுள்ள விமான நிலையத் திட்டத்தை விட்டுவிட்டு மாற்றுவழிகளை முன்னெடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.
ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம்! - போராட்டக் குழுவின் செயற்குழு உறுப்பினரான தங்கவேல் கூறும்போது, விமான நிலையம் என்ற பெயரில் மண்ணை எடுக்க வந்தால் நாங்கள் மண்ணுக்குள் கூட போவோமே தவிர ஒரு பிடி மண்ணை எடுக்க விடமாட்டோம். பல்வேறு ஏரிகளில் இருந்து வரும் நீர் ஏகனாபுரம் கால்வாய் வழியாக கூவம் ஏரிக்கு செல்கிறது. அங்கிருந்து கொசஸ்தலை ஆற்றில் கலந்து கூவம் ஆற்றில் கலக்கிறது. கம்பக் கால்வாய் என்பது கம்பவ வர்மன் என்ற பல்லவ மன்னனால் கட்டப்பட்டது. இந்த கால்வாய் பாலாற்றில் இருந்து காவேரிப்பாக்கம் வழியாக வந்து 85 ஏரிகளுக்கு நீரை வழங்கி ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் கலக்கிறது. அங்கிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குச் சென்று பின்னர் அடையாற்றில் கலக்கிறது. இந்த விமான நிலையம் கொண்டு வரப்பட்டால் இந்த கால்வாய்கள் அழியும். இவ்வளவு நீர் நிலைகளை அழித்து எங்கள் பகுதியில் விமான நிலையத்தை கொண்டு வருவதன் பின்னணியில் சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளன என்று நாங்கள் சந்தேகிக்கிறோம் என்றார்.
நெல் விளையும் பூமிக்கு பாதிப்பு! - தமிழகத்தின் வளர்ச்சிக்கு இன்னொரு விமான நிலையம் அவசியம்தான். ஆனால், நன்கு விளையும் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதுதான் இங்கு பேசுபொருளாகியிருக்கிறது. விவசாயம் மூலம் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள அப்பகுதி பொதுமக்களும் இதனாலேயே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தில் 3,246 ஏக்கர் நிலம் விவசாயம் நடைபெறும் நன்செய், புன்செய் நிலங்களாக உள்ளன. நெல் விவசாயம் நடைபெறும் இந்த நிலத்தை கையகப்படுத்துவதன் மூலம் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதே எதிர்ப்பின் பின்னணியாக உள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட கம்பக்கால்வாய், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உட்பட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 85 ஏரிகளுக்கு முக்கிய நீராதாரம் ஆகும். பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் இந்தக் கால்வாயின் 5 கி.மீ தூரம் விமான நிலையத்துக்குள் செல்வதால் கால்வாயே துண்டிக்கப்பட்டு, சங்கிலித்தொடர் போன்று ஏரிகளுக்கு செல்லும் நீராதாரம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தக் கால்வாய் மொத்தம் 85 ஏரிகள் வழியாக செல்வதால் காஞ்சிபுரத்தில் 15 ஆயிரம் ஏக்கர், ஸ்ரீபெரும்புதூரில் 7 ஆயிரம் ஏக்கர் என 22 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருக்கும் தண்ணீரைக் கொண்டு இன்றளவும் பொதுமக்கள் விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை விளைவித்து சாலையில் உலர்த்தும் நிகழ்வுகளே இதற்கு சாட்சியாக உள்ளது.
காலத்தின் கட்டாயம்! - தமிழக அரசோ, ‘‘சென்னையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு 54 நிமிடம் பயணதூரம். பரந்தூராக இருந்தால் 73 கிமீ பயணிக்க வேண்டும் என்பதை புறந்தள்ள முடியாது. இதற்காக மெட்ரோ ரயில் தடம் விரிவுபடுத்தப்படுவதன் மூலம் 1 மணிநேரமாக பயண நேரம் குறையும். இவற்றுக்கும் மேலாக சரக்குகள் கையாள்வது அதிகரிக்கும்போது, வேலைவாய்ப்புகள் பெருகும். தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம்’’ என்கிறது. - கி.கணேஷ், ச.கார்த்திகேயன், ஆர்.ஜெயப்பிரகாஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...